கிளிநொச்சியில் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன:-

381

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் கிளிநொச்சி நகரின் சாந்தபுரம் , பொன்னகர் மற்றும் சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் 6 இஞ்ச் வரை திறந்து விடப்பட்டு உள்ளன.

வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால்,  ஊரியான், பன்னங்கட்டி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, வெலிக்கண்டல், கேவில், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வட்டக்கச்சி பகுதியில் வெள்ள நீரில் ஒருவர் அடித்து செல்லப்பட்டு உள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடோன்றிக்குள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ள நீரில் மிதந்து சென்ற முதலை ஒன்று வீட்டில் நித்திரையில் இருந்த தா.விதுசா (வயது 14) எனும் சிறுமியின் தலைப்பகுதியை கெளவிஇழுத்து செல்ல முற்பட்டு உள்ளது.

அதனை கண்ணுற்ற சிறுமியின் தந்தை துரிதமாக செயற்பட்டு முதலையிடம் இருந்து மகளை காப்பாற்றி கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த முதலை மீண்டும் வெள்ள நீரிலையே மிதந்து சென்றுள்ளதால் , அப்பகுதி மக்கள் பீதியுடன் காணப்படுகின்றார்கள்.

பருவ மழையினால் கிளிநொச்சி நகரில் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அக் குழுவினர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த 29ம் திகதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது தெரிவித்து  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ். மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.

இரனைமடு வான் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது

கிளிநொச்சி இரனைமடு குளத்தின் ஜந்து வான் கதவுகள் இன்று சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகரித்த நீா் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஜந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இவ்வடம் குளத்தின் நீா் மட்டத்தினை 24 அடியாக வைத்திருப்பதற்கு  தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது குளத்தின் நீா் மட்டம் இன்று காலை 28 அடி 5 அங்குளமாக காணப்பட்டுள்ள நிலையில் குளத்தின் ஜந்து வான் கதவுகள் ஒரு அடி வரை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடா்ச்சியாக தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுமானால் மேலும் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் சுதாகரன் அவா்கள் குறிப்பிட்டார்.


இதேவேளை குளத்தின் கீழ் நீா் செல்லும் தாழ் நிலப் பகுதிகளில்  வசித்து வரும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவா் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே வேளை இன்று குளத்திற்கு விஜயம் செய்த இயற்கை வளங்கள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சா் காமினி ஜெயவிக்கிரம பெரேரா அவா்களும் குளத்தின் நிலைமைகளை அவதானித்துள்ளார்.

 

SHARE