கிளிநொச்சியில் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களது அபிவிருத்திக்காக 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு…
வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும் சமையல் பாத்திரத் தொகுதிகள் வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ள நிலையில், 29-07-2016 வெள்ளி காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சங்கங்களுக்கான சுமார் 2 மில்லியன் பெறுமதியான பொருட்களும், அதே வேளை திணைக்களத்தால் தையல் பயிற்றப்பட்ட 17 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் என்பன வழங்கும் நிகழ்வும் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மும்மதத் தலைவர்கள், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களது இணைப்புச் செயலாளர், மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன், கிளிநொச்சி மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய கிராம அபிவிருத்தி அமைச்சர், கிராம மட்ட சங்கங்களான இவ் கிராம அபிவிருத்தி மாதர் கிராம அபிவிருத்தி சிங்கங்களே அந்தக் கிராமத்துக்கு முதுகெலும்புகள், கிராமங்களது முன்னேற்றம் அந்தந்த கிராமங்களில் உள்ள மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுடைய கையிலேயே இருக்கின்றது, எனவே இவ்வாறு இருப்பதனால் இவற்றை ஒரு வருமானம் தரும் அமைப்புக்களாக மாற்றி அவற்றின் வாயிலாக அந்தக் கிராமங்களை வளப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான திட்டத்தை தாம் அமுல்படுத்தியதாகவும், இதனை சரியான முறையிலே பயன்படுத்தி நிறைவான பலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும், எனவே சங்கங்களில் உள்ளவர்கள் சரியான முறையில் இப்பொருட்களை பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.