கிளிநொச்சி – கிராஞ்சி, இலவங்குடா பகுதியில் 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 35 இற்கும் மேற்பட்டவர்களின் இந்திய இழுவைப் படகுகள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களின் கட்டளைக்கு அமைவாக கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த படகுகள் கிராஞ்சி சிறிமுருகன் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க எல்லைக்குட்பட்ட இலவங்குடா வெள்ளக்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றிலிருந்து வெளியேறும் எண்ணெய் கசிவுகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன.
அந்த பகுதியில் தொழில் செய்த 45 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாது தடுக்கப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தில் சிறகுவலை, நண்டு வலை போன்ற தொழில்களை செய்து வந்த தொழிலாளர்கள் வேறு தொழில்களை செய்ய வேண்டியுள்ளது.
குறித்த இந்திய இழுவைப் படகுகளை அகற்றி தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்த விடயம் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படகுகள் தொடர்பான வழக்குகள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் இருப்பதனால் அந்த நீதிமன்ற தீர்ப்புக்களின் பிரகாரமே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
படகுகள் சட்டநடவடிக்கைகளின் கீழ் உள்ளமையினால் நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே செயற்பட முடியும். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இது தொடர்பான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.