கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை..

266

கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ள ஆலய நிர்வாகம், குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயம் 1957 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தை தீர்த்தமாகக் கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக கிளிநொச்சி உட்பட இரணைமடு பிரதேசத்தை விட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக மீளக்குடியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில் அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விடுவிக்கப்படாது உள்ளது.

இதுஇவ்வாறிருக்க இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக புத்தர் சிலையை வைத்திருந்த இராணுவம், தற்போது அங்கு நிரந்தரமான பௌத்த விகாரையொன்றை அமைத்து வருகின்றது.

இதற்காக ஆலயத்தின் நான்கரை ஏக்கர் காணியை மூடி நிரந்தர மதில் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அங்கு 80 அடி உயரம் கொண்ட விகாரைக்கான தூபியொன்றை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரணைமடு – கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலிருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கென அம்மன் ஆலயத்தின் மூன்றாவது வீதி அமைந்துள்ள காணியில் இராணுவத்தினரால் கொங்கிறீட் தூண்கள் நிறுவப்பட்டு முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த பகுதியில் நிரந்தர மதில் அமைக்கும் பணியில் தற்போது இராணுவம் ஈடுபட்டுள்ளது.

சிங்கள மக்களே இல்லாத இந்த இரணைமடு பகுதியில் ஆலயத்திற்கு உரித்தான காணியை அடாத்தாக கையகப்படுத்தி இவ்வாறு விகாரை அமைக்கப்படுகின்றமை தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டமிட்ட ஒரு செயலென பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

சட்டவிரேதமான முறையில் இந்து ஆலய காணியை அபகரித்து விகாரை அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, ஆலயத்திற்கு சொந்தமான காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

download

SHARE