கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில் மணலுக்குப் பதிலாக கிரவல் மண் கொண்டு அமைக்கப்படுகின்ற மாதிரி வீடுகள்

176

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில் மணலுக்குப் பதிலாக கிரவல் மண் கொண்டு அமைக்கப்படுகின்ற மாதிரி வீட்டினை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேசத்தில் இதுவரை ஐயாயிரத்து 268 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள போதும், 2036 குடும்பங்களுக்கான வீட்டுத் தேவைகள் காணப்படுகின்றன.

    

இந்நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கு தேவையான மணலுக்குப் பதிலாக கிரவல் மண்ணைக் கலந்து வீடு அமைக்கும் வகையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவிக் கிராமத்தில் குறித்த கிரவல் மண்ணைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருகின்ற வீட்டினை பல்வேறு தரப்பினரும் சென்று பார்வையிட்டு தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளதுடன், குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பில் தமக்கு பூரண திருப்தி இல்லை என்றும் அவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை கபிரட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற இந்த வீடு யாரையும் வற்புறுத்தி வழங்கப்படவில்லை.

குறித்த வீடு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பெயரிலே வழங்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

SHARE