கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றமடைந்த வண்ணமே உள்ளதாகவும், ஒரே இடத்தில் இயங்காமையினால் தங்களுடைய பிணக்குகளைத் தீர்க்க வருகின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கரைச்சி மத்தியஸ்தர் சபை செயற்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் சிலகாலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும், பின்னர் கிளிநொச்சிமத்திய ஆரம்ப வித்தியாலயத்திலும் இயங்கிய மத்தியஸ்தர் சபை, பின்னர் மீண்டும் இடமாற்றமடைந்து தற்போது கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இயங்கி வருகிறது.
இதேவேளை இந்த மாதத்துடன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் செயற்படுவதற்கு குறித்த மத்தியஸ்தர் சபைக்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது தற்காலிகமாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள ஆனந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறு மத்தியஸ்தர் சபை ஒவ்வொரு இடமாக மாறி மாறி செயற்படுவது பொது மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக முதியவர்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாக கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபை நிரந்தரமாக ஒரே இடத்தில் இயங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.