கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதி விடுவிப்பு

273

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதி காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு பாதுகாப்பின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமான பரவிப்பாஞ்சானில் 180 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் 54 குடும்பங்களுக்கான காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இவர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமது காணிகள் விடுவிக்கப்படாமையினால் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாக பரவிபாஞ்சான் மக்கள் கவலை வெளியிடுவதுடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தங்களுடைய காணிகளை விடுத்து தம்மை மீள்குடியேற்றுமாறும் இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் நேற்று பரவிப்பாஞ்சான் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்தே இராணுவத்தினர் வசமுள்ள காணியில் பகுதி காணியை உடனடியாக விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.parave

SHARE