மாவட்டத்துக்கு 123 பேர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மீள்குடியேறிய விவசாயிகளில் இருந்து 615 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியில் உழுந்து, பயறு, நிலக்கடலை ஆகியவற்றின் விதைகள் அடங்கிய பொதியோடு மண்வெட்டி, கத்தி ஆகிய உபகரணங்களும் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அபிவிருத்தி நிதியில் இருந்து மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இத்தாவில், முகமாலை, வேம்போடுகேணி, உழவனூர்,நாதன்திட்டம் கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 123 விவசாயிகளுக்குமான விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை வேம்போடுகேணி சி.சி.த.க பாடசாலையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைப்பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் ஜெ.ஜெயதேவி, அ.செல்வராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.