மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துறையில் விசேட அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனத் திட்டமான உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது அரசாங்கம் இன, மத பேதமற்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது. விவசாயிகளுக்காகவே நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளது. விவசாயிகள் இல்லாவிட்டால் நீர்ப்பாசனத் திணைக்களம் என்ற ஒன்று இல்லாமல்போய்விடும்.
இந்நிலையில் விவசாயிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படவேண்டும். மட்டக்களப்பில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன திணைக்களத்திற்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும். எமது பிரதேசத்தின் வளர்ச்சியில் முதுகெலும்பாகவுள்ள விவசாயத்துறையினை மேலும் திறம்பட முன்கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் உன்னிச்சை நீர்ப்பாசன முகாமைத்துவத் திட்டத்தின் தலைவர் கே.யோகவேள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
|