கிழக்கு மாகாணத்தில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்தின் எஸ் டீ பி அமைப்பின் காணி மனித உரிமை செயற்பாட்டாளர் வூவி தெரிவித்துள்ளார்.
இன்று திருகோணமலை குச்சவெளி வாலையுற்று பிரதேசத்தில் சுற்றுலா துறை மூலம் சாதாரண மக்களது உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பாக நடந்த செயலமர்வில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது திருமலையில் நடக்கின்ற நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள்,
சிறுவர்கள் துஸ்பிரயோகம் அதிகமாக நடக்கின்ற பிரதேசமாக இன்று திருமலை மாறிவருகின்றது. பெண்கள் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்கின்றமையால் சிறுவர்கள் தொழில் தேடி சீரழிகின்ற நிலைமைகள் அதிகரித்துள்ளது.
சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களை பாவிக்கின்றனர். கரையோர காணிகளை கடல் படையினர் அடைத்து வைத்துள்ளார். அரிய இன மீன்கள் அழிந்து போகின்றது. இதை கடல் படையினர் பார்த்தும் பாராமல் இருக்கின்றனர்.
எமது காணிகளை விட்டு வெளியேறுமாறு துப்பாக்கி முனையில் வைத்து வெளியேற்றினார். எங்களது காணிகளில் உள்ள தேங்காய்களை பாதுகாப்பு படையினர் பறித்து விற்கின்றனர், எமது வளவுக்குள் இருக்கின்ற ஒரு தேங்காய் கூட எம்மால் பறிக்க முடியாத நிலை உள்ளது.
ரைக்கம் உப்பு உற்பத்தி நிலையத்தால் 1000 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ரைக்கம் நிறுவனத்தினர் வருகின்ற போது 500 பேருக்கு தொழில் வாய்ப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் இன்று எமக்கு 3 பேருக்கு மட்டுமே கூலி தொழில் செய்வதற்கு வாய்ப்பு தந்துள்ளனர்.
இதன் காரணமாக வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கின்றோம். எமது காணிகளுக்குள் செல்வதற்கு பாதுகாப்பு படையினரும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களும் தடுக்கின்றனர்.
கடல் வளம் எமக்கே உரியது. கடல் கரையோரம் 185 அடி பிரதேசம் மீனவர்களுக்கு தொழில் செய்வதற்கு உரிமை உண்டு.
அதில் நாங்கள் மீன்களை கருவாடு போட்டு உயிர் வாழ்ந்து வந்தோம். எமக்கு கடற் கரையோரம் செல்ல முடியாத நிலை சுற்றுலா துறை மூலம் வருகின்ற வெளிநாட்டவர்கள் எமது கடற் கரை வளங்களை அனுபவிக்கின்றனர்.
விடுதிகள் இருக்கின்ற கடற்கரையோரம் சென்றால் அடிக்க வருகின்றனர். வாவிகளில் கழிவுகளை கொண்டு போடுகின்றனர், சிறிய சிறிய வாடிகளை அமைத்து சமூக சீர்கேடுகளுக்கு வளி வகுக்குகின்றனர்.
நாம் யாரிடம் போய் செல்லுவது இந்த இடம் எமது நிலம் எமது பிள்ளைகள் கஷ்டபடுகின்றனர். எமது பிள்ளைகளுக்கு கழுவுகின்ற துடைக்கின்ற வேலையையே இந்த சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தருகின்றனர்.
இது எந்த விதமான சுற்றும் அபிவிருத்தி வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இங்கு தொழில் செய்கின்றனர்.
சுற்றுலாத்துறை மூலம் எமக்கு எந்தவிதமான பலனும் இல்லை. அது போன்று இங்கு நடக்கின்ற எந்தவிதமான அபிவிருத்திகளும் எமக்கு வருவதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.