கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக நிர்வாகத்திடம் பாதுகாப்பு கோரி கடிதம் கையளிப்பு

124

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் வளாக ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கின்ற நிலையில் பாதுகாப்பு கோரி நிர்வாகத்திடம் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாகக் கட்டடத்தினுள் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2016.03.08 அன்று மேற்படி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து 9 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டில் இறுதியாக நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்த இந்த 9 மாணவர்களினதும் பரீட்சை முடிவுகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வெளியான பரீட்சை முடிவுகளில் காணப்படவில்லை.

இதனைக்கண்டித்தே விரிவுரையாளர்களையும், நிர்வாக உத்தியோகத்தர்களையும் மாணவ குழுவினர் தடுத்து வைத்து 6 மணித்தியாலங்களின் பின்னர் விடுவித்திருந்தனர்.

கடந்த செவ்வாய்(2) மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணிவரை இவர்கள் மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து தங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும் புதன்கிழமை தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆராய்ந்ததுடன், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வளாக நிர்வாகத்திடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE