கிழக்கு மாகாண அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் ஹிஸ்புல்லா.

155

 

hisbullaகிழக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்ற உடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா செய்த முதலாவது வேலை மாகாணத்திற்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசிற்கு தாரை வார்த்ததுதான்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளையும் அம்பாறையில் உள்ள ஒரு பாடசாலையையும் தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சுக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்தார்.

மாகாணசபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது மாகாணத்திற்கு இருக்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதாகும்.

இதை உணராத சிலர் ஹிஸ்புல்லா நான்கு தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி விட்டார் என மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். ஹிஸ்புல்லாவின் அதிரடி நடவடிக்கை என மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் பற்றி அடிப்படை அறிவு அற்ற சில இணையத்தளங்கள் புகழந்து செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

மாகாணசபையின் கீழ் இருக்கும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி மத்திய அரசிடம் கையளிப்பது தமிழ் மக்களின் போராட்டங்களுக்கும் அபிலாசைகளுக்கும் எதிரானது என்ற விடயத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையான விடயம்.

தமிழ் மக்கள் இரத்தம் சிந்தி போராடியதன் விளைவாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, விவசாயம், என்பன முழுமையாகவும், காணி பொலிஸ் மற்றும் நீர்ப்பாசனம் என்பன பகுதி அளவிலும் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டது.

இன்றும் அதிகார பரவலாக்கல் செய்யப்பட்டு மாகாண சுயாட்சி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்றே தமிழ் மக்கள் கோரி வருகின்றனர்.
மாகாணசபை உருவாக்கப்பட்ட போது ஆட்சியில் இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதன் பின்னர் வந்த மத்திய அரசாங்கத்தின் தலைவர்களும் மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

வரதராஜபெருமாள் தலைமையில் வடகிழக்கு மாகாணசபை உருவான போது மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. வடகிழக்கு மாகாண பொலிஸிற்கு பொறுப்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா நியமிக்கப்பட்டதும், அதன் சிவில் தொண்டர் படை என வரதராசபெருமாள் தலைமையிலான மாகாண அரசு ஆட்சேர்ப்பு செய்ததும் பழைய சம்பவங்கள், அதன் பின் ஒரு வருடத்தில் வடகிழக்கு மாகாண அரசு கலைக்கப்பட்ட பின் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரத்தை மீளப்பெற்றுக்கொண்டார்.

13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உயர்கல்வி தவிர்ந்த கல்வித்துறையின் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
1985ஆம் ஆண்டு தேசிய பாடசாலைகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் மாகாணசபை சட்டம் கொண்டுவரப்பட்ட போது கொழும்பு நகரில் உள்ள பிரபல பாடசாலைகள் சில உட்பட 18 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக இருந்தன. இலங்கையில் உள்ள ஏனைய அனைத்து பாடசாலைகளும் மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழேயே இருந்தன. குறிப்பாக வடக்கு கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் மாகாண கல்வி அமைச்சின் கீழேயே இருந்தன.

அதன் பின் கல்வித்துறை அதிகாரத்தை மாகாண சபையிடமிருந்து பறித்தெடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பாடசாலை திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த முற்பட்டது.

பிரபல பாடசாலைகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாகாண கல்வி அமைச்சை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டமே தேசிய பாடசாலைகளாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் புனித மிக்கேல் கல்லூரியும் புனித சிசிலியா கல்லூரியும் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதற்கான சிபார்சை செய்தவர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் அவர்களாகும்.
மாகாணசபைகளின் கீழ் இருக்கும் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவது

மாகாணங்களின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் செயல் அல்லவா, அதிகாரப்பரவலாக்கலுக்காக போராடும் உங்களைப்போன்றவர்கள் மாகாணத்தின் அதிகாரத்தை பறித்தெடுப்பதற்கு துணைபோகலாமா என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களிடம் நாம் கேள்வி எழுப்பிய போது உண்மையில் இது அதிகாரப்பரவலாக்கலுக்கு எதிரான விடயம் தான். என்ன செய்வது பாடசாலை நிர்வாகங்கள் தங்கள் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றி தருமாறு கோருகிறார்களே என பதிலளித்திருந்தார்.

தமது பாடசாலைகள் தேசியப்பாடசாலைகளாக மாற்றப்பட வேண்டும் என பாடசாலை நிர்வாகங்கள் விரும்பியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. தாம் ஓய்வு பெறும் வரை அப்பாடசாலையில் அல்லது நகர் புறத்தில் உள்ள இன்னொரு தேசிய பாடசாலையில் பணிபுரியலாம். வசதி குறைந்த கிராமபுற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்வ வேண்டி ஏற்படாது என்ற சுயநல நோக்கமே ஆகும்.
தேசிய பாடசாலை திட்டம் என்பது சமனான வளப்பங்கீட்டு கொள்கைக்கு எதிரானதாகும்.

1990ஆம் ஆண்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 18ஆகும். ஆனால் இன்று நாடு முழுவதிலும் 350க்கு மேற்பட்ட தேசிய பாடசாலைகள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருந்த போது மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்தெடுப்பதற்கு அனுமதிக்கவில்லை.

தேசியப்பாடசாலைகளாக தமது பாடசாலைகளை மாற்றுமாறு இந்த நான்கு பாடசாலைகளும் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருந்த போது கோரியிருந்தனர். இது மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கும் செயல் என கூறி அப்போது இருந்த மக்கள் பிரதிநிதிகள் சபை மறுத்திருந்தது. மக்கள் பிரதிநிதிகள் சபையின் பதவிக்காலம் முடிந்ததும் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஹிஸ்புல்லா மத்திய அரசுக்கான தனது விசுவாசத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்திலிருந்து தற்போதைய ஜனாதிபதி வரை மாகாணசபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை பறித்தெடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

கடந்த மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நகர அபிவிருத்தி மற்றும் திவிநெகும சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி மாகாணசபைகளிற்கு இருக்கும் அதிகாரங்களை பறித்தெடுப்பதற்கு மத்திய அரசு முற்பட்டது. மாகாணசபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை பறித்து பசில் ராசபக்சவின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு வழங்குவதற்கே இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. திவிநெகும சட்டத்தின் மூலம் மாகாணசபைக்கு இருந்த 12 அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டன.

இச்சட்ட மூலத்தின் நோக்கம் மாகாணசபைகளின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு பசில் ராசபக்சவின் கீழ் இருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதாகும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு அதிகாரங்களை குவிப்பதே இச்சட்ட மூலத்தின் நோக்கமாகும்.

இச்சட்ட மூலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இரு மாவட்டங்களை இணைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. உதாரணமாக திருகோணமலை மாவட்டத்துடன் பொலனறுவையை அல்லது அனுராதபுரத்தை இணைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இது மாகாணசபை அதிகாரங்களை பறிக்கும் செயல், இதனை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். சட்டத்தரணி சுமந்திரன் அவருக்காக நீதிமன்றில் வாதாடினார்.
இந்த மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழாம் மகிந்த அரசுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பை வழங்கினர்.

அனைத்து மாகாணசபைகளின் சம்மதம் இன்றி மாகாணசபைகளுக்கு இருக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே இச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்ற வரலாற்று தீர்ப்பை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர். எதிர்காலத்திலும் மாகாணசபைகளின் சம்மதம் இன்றி மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்த கூடாது என இத்தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

இது நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துறையான ஜனாதிபதிக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியிருந்தது. இத்தீர்ப்பை அடுத்து பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்காவை ஜனாதிபதி மகிந்த ராசபக்ச பதவி நீக்கியிருந்தார்.
இது உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு மாகாணசபை உட்பட எட்டு மாகாணங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அச்சட்ட மூலத்திற்கு அம்மாகாணங்கள் ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன. வடமாகாணசபை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஆளுநர் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். வடமாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் சபை இருந்திருந்தால் திவிநெகும சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்கள். பாராளுமன்றில் அச்சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாமல் போயிருக்கும்.

அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டின் கீழ் இருந்த கிழக்கு மாகாண சபையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் இருந்த வடமாகாண சபையிலும் இருந்த மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிக்கும் செயல்களுக்கு இடம்கொடுக்கவில்லை.

மாகாணசபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி ஆளுநர்கள் மூலம் மாகாணத்திற்கு அதிகாரங்களை பறிக்கும் செயல்களை தற்போது மத்திய அரசு செய்து வருகிறது.

மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் செயல்களில் ஜே.ஆர். தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வரை கங்கணம் கட்டி செயல்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கை சிங்கள தலைவர்கள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதையோ அதிகாரப்பரவலை செய்வதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக ஹிஸ்புல்லா பதவி ஏற்ற உடன் மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் 4 தமிழ் பாடசாலைகளை மத்திய அரசுக்கு தாரை வார்த்திருக்கிறார்.

அதிகாரத்தை பரவலாக்கி மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி சுயாட்சி அடிப்படையிலான அரசியல்யாப்பை உருவாக்க வேண்டும் என கோரிவரும் தமிழர் தரப்பின் அபிலாசைகளுக்கு எதிரானதாகவே இது அமைந்துள்ளது.

SHARE