
கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் நடவடிக்கைகளினால் தாம் பொறுமையிழந்ததாக மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சம்பூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண ஆளுனரின் நடவடிக்கை காரணமாகவே தாம் ஆத்திரமுற்று அவ்வாறு நடந்து கொண்டதாக நசீர் தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுனர் தமக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை எனவும், அடிக்கடி தமது அதிகாரத்தில் தலையீடு செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் உத்தியோகபூர்வமாக தமது பெயரை நிகழ்ச்சி கூறவில்லை எனவும் ஆளுனர் தம்மை அழைத்த போது தாம் மேடையில் ஏற முயற்சித்ததாகவும் அதன் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் தம்மை தடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் முதலமைச்சர் எனவும் அதற்கான மரியாதையை வழங்குமாறு ஆளுனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கோரியிருந்தால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும், கடற்படை அதிகாரி அப்பாவி எனவும், ஒட்டுமொத்தப் பிழையும் ஆளுனருடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக தாம் கிண்ணியாவில் ஓர் நிகழ்ச்சியில் ஆளுனருடன் பங்கேற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சம்பூர் நிகழ்ச்சிக்கு ஹெலிகொப்டர் மூலம் செல்வது குறித்து கேட்ட போது ஹெலிகொப்டரில் இடமில்லை எனவும் நிகழ்ச்சி முடிவடையும் வரையில் இருக்காது முன்கூட்டியே தரைவழியாக சம்பூர் செல்லுமாறும் ஆளுனர் பணிப்புரை விடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி சம்பூர் சென்று காத்திருந்ததாகவும் ஆளுனரும் அமெரிக்கத் தூதுவரும் ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாகவும், தமது பெயரை நிகழ்ச்சியில் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த அனைத்திற்கும் ஆளுனரே பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் முதலமைச்சருக்கு மரியாதை வழங்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவா் குறிப்பிட்டுள்ளார். மாகாணத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்
24-05-2016 9:08
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியதாக கிழக்கு மாகாண அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நாசீர் அஹமட் இவ்வாறு கடற்படை அதிகாரியை, அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் முன்னிலையில் இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுமையாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு முதல் அமெரிக்கத் தூதுவர் மேடைக்கு அழைக்கப்பட்டமையை பகிரங்கமாக கண்டித்து இவ்வாறு திட்டியுள்ளார்.
நிகழ்வு நடைபெறும் தினத்தில் முதலமைச்சர் நாட்டில் இருக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் அழைப்பு விடுக்கப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுனரே முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுத்து மரியாதை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்