கிழக்கு மாகாண பாடசாலைகளில் நாளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

223

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளைய தினம்(28) கல்வி நடவடிக்கைகள் நடைபெற மாட்டாது எனவும் அதற்கு மாறாக அனைவரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கல்வி அமைச்சின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றிலிருந்து 3 நாட்களைக் கொண்டது. எனவே இன்று பாடசாலை நாளில் அதனை ஒழுங்குபடுத்தி ஆரம்பித்தால் மட்டுமே நாளையும் நாளை மறுதினமும் அதனை முன்கொண்டு செல்ல முடியும்.

எனவேதான் இன்றைய தினத்தில் கல்விச் செயற்பாடுகளைத் தவிர்த்து டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகளில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர் சமூகமும் இணைந்து செயற்படவேண்டும்.

இதனூடாக நாம் பாடசாலையை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சூழலையும் அழகுபடுத்துகிறோம். கூடவே டெங்கு நோய்த்தாக்கத்திலிருந்து எமது பிள்ளைகளையும் சமூகத்தையும் காப்பாற்றுகின்றோம்.

நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதற்காக விடுமுறை என்று யாரும் நின்று விடக்கூடாது. அனைவரும் பாடசாலைக்கு வரவேண்டும். பிள்ளைகள் சிரமதானத்திற்குரிய உடையில் வரலாம். சீருடை அவசியமில்லை.

இதேவேளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் தற்போது நடைபெற்றுவரும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை நாளை நடைபெறாது.

பதில் பரீட்சை தினம் பற்றி இரு வலயங்களினதும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பின்னர் அறிவிப்பார்கள்.

மேலும் இவ்விருவலயங்களிலும் எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமையும் பரீட்சை இடம்பெறாது. ஏனெனில் அன்றைய தினம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தமிழிலக்கிய விழாவின் ஆரம்பநாள் பண்பாட்டுப் பேரணியாகும்.

அதில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொள்வதால் அன்றைய பரீட்சையும் பின்போடப்பட்டுள்ளது. பதில் தினங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இரண்டாம் தவணைப் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதிவரை அதாவது 2ஆம்தவணை விடுமுறை விடப்படும் தினம் வரை நடைபெற நேர அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த பரீட்சைகள் பின்போடப்பட்டால் எப்போது அவற்றை நடாத்துவது என்பது தொடர்பில் தீர்மானிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

பெரும்பாலும் 3ஆம் தவணை ஆரம்பத்தில்தான் நடத்த வேண்டிவரும் என்ற நிலை காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE