
சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.
