தெரிந்தே விபச்சாரம் செய்தால் தவறேதும் இல்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் புதுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக இல்லாமல் தெரிந்தே ஒருவர் விபச்சார தொழில் செய்யும்போது அதனை குற்றம் எனக் கருத முடியாது என்றும், பாலியல் தொழிலாளர்கள் விருப்பப்படி செயல்பட்டால் அவர்களை தண்டிக்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் இதுபற்றிய உத்தரவில் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவின் குஜராத மாநிலம் சூரத் பகுதியில் செயல்படும் விபச்சார விடுதியில் கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதியன்று பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த பாலியல் தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதில், வினோத் படேல் என்ற நபர், பாலியல் தொழிலாளியின் விருப்பப்படியே, தான் அங்கு சென்றதாகவும் இதனை குற்றம் எனக் கூறி பொலிசார் 370 தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் எப்படி கைது செய்ய முடியும் எனவும் கேட்டு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, பாலியல் தொழிலில் ஒருவர் விருப்பப்பட்டு ஈடுபடும்போது அதனை குற்றம் எனச் சொல்ல முடியாது என்று கூறியதோடு, கைது செய்யப்பட்ட வினோத் படேலை உடனே விடுவிக்கும்படியும் உத்தரவிட்டனர்.
கட்டாயத்தின்பேரில், யாரேனும் ஒருவரை மிரட்டி பாலியல் தொழில் செய்ய வைத்தால் மட்டுமே அது தவறு என்றாகிவிடும்.
விருப்பத்தின்பேரில், தெரிந்தே அந்த தொழிலை செய்வதால், அவரை தண்டிக்க முடியாது என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.