குடிநீருக்காக மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

274
லிந்துலை, பாமஸ்டன் கொலனியில் 300 இற்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் கிராம பகுதி மக்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினை நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த அரசாங்கத்திலும்,  புதிய அரசாங்கத்திலும் உள்ள அரசியல்வாதிகளிடமும் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும், குடிநீரை வழங்கும் படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடிதம் மூலமாகவும் வாய் மூலமாகவும் முன்வைக்கபட்ட கோரிக்கைகளுக்கு இணங்க, மத்திய மாகாண நீர்வழங்கல் அதிகார சபையின் ஊடாக உலக வங்கியில் நிதியினை பெற்று நீர் வழங்கல் திட்டம் ஒன்றை செய்வதாக உறுதிகள் கூறப்பட்டிருந்தன. ஆனால் இரண்டு வருடங்களாகியும் இவர்களுக்கான குடிநீர் திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை.

200 மில்லியன் ரூபா செலவில் உலக வங்கியின் நிதியினை கொண்டு கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இந்த குடிநீர் வேலைத்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.

“உடனடியாக எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா பிரதேச செயலக பிரதி செயலாளர், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பொது மக்கள் மற்றும் பாமஸ்டன் விகாரையின் பௌத்த பிக்கு ஆகியோர் தங்களின் குறைப்பாடுகளை முன்வைத்தனர்.

இதற்கு இணங்க நானுஓயா குளிர் ஓடை (ஐஸ் பீலி) பகுதியிலிருந்து தற்காலிகமாக குடிநீர் தருவதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதற்காக கால அவகாசம் வேண்டும் எனவும் ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE