குடியரசுத் தலைவரிடம் இந்துக்கள் நேரில் வேண்டுகோள்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் திரு மாவை சேனாதிராஜா
மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா
சிவ பூமி அறக்கட்டளை தலைவர் திரு. ஆறு திருமுருகன்
சிவ சேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்ட வேண்டுகோளை இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் திரு சிவபால தேசிகர் செயலாளர் திரு சிறீந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேரில் கையளித்தனர்.
1 மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருக
2 பசுவதை தடைச் சட்டம் கொண்டு வருக
3 இந்து சமயத்தை அரசியலமைப்பில் முன்னுரிமைச் சமயம் ஆக்குக
ஆகிய மூன்று வேண்டுகோள்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குடியரசுத் தலைவராக இரணில் பொறுப்பேற்ற பின் இந்துக்களின் வேண்டுகோளை ஏற்று இரணில் செய்த 10 நன்மைகளையும் பாராட்டி இருந்தனர்.
பாராட்டும் வரிகள் பின்வருமாறு.
உங்கள் ஆட்சிக் காலத்தில்
1 திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தாரின் புத்த மேலாதிக்க அடாவடித்தனத்தை நிறுத்தினீர்கள்.
2 வெடுக்குநாறி மலையில் உடைந்த சைவத் திருவுருவங்களை மீண்டும் நிறுவ வழி செய்தீர்கள்.
3 மதமாற்றி ஒருவர் மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் வருவதைத் தடுத்தீர்கள்.
4 மதமாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற மதம் மாற்றிகளை திருப்பி அனுப்பியும் தடுத்து நிறுத்தியும் நடவடிக்கை எடுத்தீர்கள்.
5 செல்வாக்கான செல்வந்தரான மதமாற்றி செரோம் பெர்ணாந்து, இந்துக் கடவுளரைப் பழிக்கும் செவி கய்க்கும் சொற்களைச் சொன்னதற்காக இந்துக்களின் வேண்டுகோளை ஏற்றுச் சிறையில் அடைத்தீர்கள்.
6 மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினீர்கள்.
7 குடியரசுத் தலைவர் மாளிகையில் தீபாவளி நாள்களில் நந்திக் கொடியைப் பறக்க விட்டீர்கள்.
8 புத்த தீவிரராகப் புத்த சமயத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி, இந்து சமயத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்திய தொல்லியல் துறை ஆணையர் விலக வழி வகுத்தீர்கள்.
9 பகவத் கீதைக்கான உலக மாநாட்டையும் சமஸ்கிருத மொழிக்கான உலக மாநாட்டையும் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறீர்கள்.
10 இந்து சமய வழிபடு பயணிகளுக்காகக் காங்கேயன்துறை நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஏற்றினீர்கள்.
இவ்வாறாக நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு இந்து சமயத்தவர் முன்பிருந்ததை விட மன உறுதியும் வலிமையும் உள்ளவர்களாக இருப்பதற்கு நடவடிக்கைகள் சில எடுத்துள்ளீர்கள்.
அவை போதாது. மேலும் பல நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.
பாராட்டிய பின்
பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்
1. இந்து சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை
2. மதமாற்றத் தடைச் சட்டம்
3. பசுக் கொலைத் தடைச் சட்டம்
இம் மூன்றையும் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி இலங்கையில் இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வாழ்வியலையும் நன்நெறியையும் இடையூறின்றிக் பேணவும் போற்றவும் ஆவண செய்வீர்களாக.
இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுப்பீர்களானால்
இந்துக்களின் வாக்கு வங்கி ஆதரவை உங்களுக்காகப் பெற்று தருவோம்
என மறவனபுலவு க. சச்சிதானந்தன் குடியரசுத் தலைவரிடம் நேரில் கூறினார்.
இலங்கை சிவபூமி. இலங்கையின் ஆதிசமயம் சைவ சமயம். சைவர்களோடு சேர்ந்து புத்தர்களும் விஷ்ணுவை சிவனை உமையை கண்ணகியை கல்வி செல்வம் வெற்றிகான அம்மன்களை விநாயகரை முருகனை வழிபடுகிறார்கள்.
இந்துக்கள் இந்த நாட்டில் உரிமையோடு வாழ்வதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள். இலங்கை சிவ பூமி என்பதைப் புத்த சமயத்தவரும் உறுதி செய்கிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் இரணில் விக்ரமசிங்கா வந்திருந்த அனைத்துச் சமயப் பேராளரிடமும் தெளிவாகக் கூறினார்.