குண்டுத் தாக்குதல்களின் பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பிரதம சட்ட வைத்திய அலுவலகத்துக்கு வருகைதந்து தெரியப்படுத்துமாறு, கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் இலக்கம் 111, பிரான்சிஸ் வீதி, கொழும்பு – 10 இல் அமைந்துள்ள சட்ட வைத்திய மற்றும் நச்சு வைத்திய பிரிவுக்கு அறிவிக்குமாறு, நீதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் வருகை தந்து தகவல்களை வழங்குமாறு நீதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் 102 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 92 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரசேவைப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு நீதவான்கள், சட்ட வைத்திய அதிகாரிகள் 6 பேரின் கீழ் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் 10 சடலங்களின் பிரேத பரிசோதனைகளின் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலங்களை வைப்பதற்கு போதுமான குளிர்சாதனப்பெட்டிகள் இன்மையால், சுகாதார அமைச்சரின் தலையீட்டின் கீழ், இரண்டு நடமாடும் குளிர்சாதனப்பெட்டிகள் வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 140 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், 89 சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.
35 சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாதமையால், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 6 சடலங்களை அடையாளம் காண்பிப்பதற்கு இதுவரை எவரும் வருகை தரவில்லை எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 20 வௌிநாட்டுப் பிரஜைகளின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் 22 வௌிநாட்டு பிரஜைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையல் 29 சடலங்கள் உள்ளதுடன் 23 சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகனளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 300 பேர் உயிரிழந்துடன் காயமடைந்த 500 க்கும் அதிகமானோர், தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு வைத்தியசாலை, மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறு காயங்களுக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதுடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 29 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், தேவையான மருந்துகள் மற்றும் ஏனைய வைத்திய உபகரணங்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.