
முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு, பின் கட்டப்படும் இடத்திற்கு, கொண்டு வரப்பட்டு, பொருத்தப்படும், பொருத்து தனி வீடமைப்பு திட்டம், காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம், குளிர் கால சீதோஷண நிலைமைகள் கொண்ட இலங்கை மலைநாட்டுக்கு பொருத்தமானதா என ஆராய்வது முறையானது என நான் நம்புகிறேன். எனவே இதுபற்றி பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவிலும் இவ்விவகாரம் விரைவில் பரிசீலிக்கப்பட உள்ளது.
உலகின் குளிர் மற்றும் மத்திய சீதோஷண வலய நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையாக்கப்படும் இந்திட்டம், மலையக சீதோஷன நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது, விஞ்ஞானப்பூர்வமாக பரிசீலிக்கப்பட்டு, நடைமுறை ஆக்கப்படுமானால், அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் என்ற எங்கள் திட்டம், மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே எமது பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில் லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். இந்த மலைநாட்டு வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள், மலைநாட்டில் கட்டப்படுவது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில் தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால் பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே மாற்று மூலப்பொருட்களை பயன்படுத்தி, உதிரி பாகங்களை தொழிற்சாலைகளில் செய்து,அவற்றை கொண்டு வந்து, பொருத்தி வீடுகளை சடுதியாக கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர் வலய பகுதிகளில், சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள இந்த பொருத்து வீட்டு திட்டம், மலைநாட்டில் நடைமுறையாக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்க வேண்டும்.
வடக்கில் 65,000 தனி பொருத்து வீடுகளை கட்ட முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அது இன்று அப்பிரதேச மக்கள் வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வெளியிட்ட எதிர்ப்புகள் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், வடக்கின் சீதோஷண நிலைமைகளுக்கு பொருந்தி வராது என்ற காரணம் இன்று ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. எனவே இதை குளிர் சீதோஷண நிலைமைகளை கொண்ட மலைநாட்டில் நிர்மாணிக்க முடியுமா என நாம் பார்க்க வேண்டியுள்ளது.
மலைநாட்டின் நூறு வருடங்களுக்கு மேல் இழுபட்டு வரும் வீடில்லா பிரச்சினைகளை தீர்த்து தனி வீடுகள் கட்டும் திட்டத்தை,இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள எமது நல்லாட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சி காலத்துக்குள் முடித்துவிட எமது கூட்டணி விரும்புகிறது. இன்றைய எமது அரசாங்கத்திற்கு உள்ளே நாம் நிதானமாக காய் நகர்த்தி செயற்பட்டு வரும் இந்த காலத்துக்குள்,இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், இதை என்றுமே இதை தீர்த்து முடியாது. ஏற்கனவே எமது பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில் லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். இந்த வீடமைப்பு திட்டத்துக்கு இலங்கை, இந்திய அரசுகள் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த மலைநாட்டு வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம். இந்த பின்னணியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுபற்றிய சிபாரிசை நாம் முன்வைத்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவும் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் உரிய முடிவை எடுக்கும்.