உங்களின் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்து வந்தால், உடல்ரீதியாக அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி நீங்கள் உங்கள் குழந்தையின் மீது வைத்துள்ள அன்பையும் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
மேலும் உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், மலச்சிக்கல் வராமல் பாதுகாத்தல் போன்ற நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
கால்கள்
கால்கள் தான் மசாஜை தொடங்க சிறந்த இடம். அதற்கு காரணம் மற்ற உறுப்புகளை விட கால்களில் தான் உணர்ச்சி குறைவாக இருக்கும்.
உங்கள் விரல்களினால் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு குழந்தையின் தொடையிலிருந்து கீழே வரைக்கும் நீவி விட வேண்டும், இதேபோல கைகளுக்கும் செய்து விட வேண்டும்.
உள்ளங்கால்
உங்களின் பெருவிரலை கொண்டு குழந்தையின் உள்ளங்கால்கள் முழுவதும் மெதுவாக வட்ட சுழற்சி முறையில் நீவவேண்டும்.
கால் விரல்கள்
குழந்தையின் கால்களின் பத்து விரல்களிலும், உங்களின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களைக் கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விடவும். இதனால் பாதங்களில் மசாஜ் முழுமைப் பெறும்.
கைகள்
குழந்தையின் கைகளை, உங்களின் கைகளால் தூக்கி, அதன் அக்குள்களிலிருந்து மணிக்கட்டு வரை, பால் கரக்கும் முறையில் நீவி மசாஜ் செய்ய வேண்டும். பின் கையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.
நெஞ்சு
உங்கள் கைகளை குழந்தையின் நெஞ்சில் வணங்கும் முறையில் வைத்து, பின் கைகளை மெதுவாக திறந்து நீவி விட வேண்டும். இந்த மசாஜை செய்யும் போது உங்களின் கை, குழந்தையின் நெஞ்சின் மேல் தட்டையாக இருக்குமாறு வைத்து மசாஜ் செய்து விட வேண்டும்.
வயிறு
வயிற்றில் மசாஜ் செய்யும் போது குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் ஒன்றாக பிடித்துக் கொண்டு, முட்டியை வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்குங்கள். இது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள வாய்வுகளை வெளியேற்ற உதவும்.
பின்பக்கம்
குழந்தையை குப்புற படுக்க வைத்து, உங்களின் விரல் நுனிகளால், குழந்தையின் இருபக்க முதுகெலும்பின் ஆரம்பத்திலிருந்து கீழே வரை மெதுவாக நீவி விட வேண்டும்.