கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் குறிவைக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

303

தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரையில் 03தசாப்த காலங்களாக ஏமாற்றப்பட்டுவந்தமை ஒருபுறமிருக்க, தமிழ்த் தரப்புகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கங்கள் செயற்பட்டு வந்திருந்தமை வரலாறு. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரே குறிக்கோளோடு புறப்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் தமி ழீழம் என்கிற கோரிக்கையினையே முன்வைத்தனர். ஆனால் அது கைகூடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளின் அடிப்படையிலேயே போர் உச்சக்கட்டத்தினை அடைந்தது. 1987 காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கும் என இந்திய இராணுவத்தை நம்பியிருந்தபோதும் தமிழினத்திற்கு அவர்கள் அநீதிகளையே செய்தனர். இந்திய இராணுவம் இலங்கை வந்திறங்கியபோது அவர்களும் ஒன்றுபட்டு இயங்கிவந்த ஆயுதக்குழுக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டனர். அக்காலத்தில் த்ரீ ஸ்ரார் என்கிற இயக்கம் பிரபலமடைந்திருந்தது. இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் இவ்வாயுதக்குழுக்கள் செயற்பட்டமையின் காரண மாக விடுதலைப்புலிகள் மணலாறு காட்டுப் பகுதிக்குள் சென்று தமது பயிற்சிகளை மேற்கொண்டனர்.

wig-sam

அக்காலத்தில் இந்திய இராணு வத்தின் ஒட்டுக்குழுக்களாக ரெலோ, புளொட், ஈ.என்.டி.எல்.எப் போன்றன செயற்பட்டு வந்தன. அக்காலகட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் பாரிய அளவில் இல்லாதபோதிலும் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியதன் பின்னர் மீண்டும் விடுதலைப்புலிகள் தமது நிலப்பரப்பைக் கைப்பற்றி இலங்கை அரசிற்கு எதிராக அதிதீவிரமான யுத்தத்தினை முன்னெடுத்து வந்தனர்.

இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, பிரேம தாசா போன்றோர் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் நிரந்தர எதிரிகளாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக விடுதலைப்புலிகளின் அமைப்பினால் ராஜீவ்காந்தியைக் கொலைசெய்யும் அளவிற்கு நிலைமைகள் மாற்றம் பெற்றது. இந்தியா தமிழினத்திற்கு குரல்கொடுக்கும் என்கிற நம்பிக்கையும் அற்றுப்போனது. அமைதிப்படையாக வந்த இந்தியா தமது அராஜகத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. பாலியல் வன்முறைகள், கொலைகள், காணாமல்போனோர் என கண்மூடித்தனமான அராஜகம் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தது. இந்தியாவின் பரா இராணுவக்குழுவின் மீது சரமாரியாக விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். இதில் 600இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் காணாமற்போயுமிருந்தனர். இதனால் நிலைகுலைந்துபோன இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது தனது முழுப் பலத்தையும் பிரயோகித்தது. தொடர்ந்தும் கெரில்லா தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்திய இராணுவத்தினர் தீர்வுகளைப் பெற்றுத்தருவார்கள் என்றுதான் தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆனால் தமிழினத்திற்கெதிராகவே இவர்கள் செயற்பட்டனர். இந்திய இராணுவம் இலங்கை மண்ணைவிட்டு வெளியேறும் வரையில் 750போராளிகளும், 5000இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர். 2500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தியாகி திலீபன் இந்திய இராணுவம் இந்நாட்டிலிருந்து வெளி யேறவேண்டும் என்பதை வலியுறுத்தி நல்லூர் வீதியிலே சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மேற் கொண்டிருந்தார். காந்தியத்தின் கொள்கைகளை மதிக்கின்ற இந்தியா இலங்கையில் தனது படைகள் தொடர்ந்து தங்கியிருக்குமாகவிருந்தால் பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் என்கிற காரணத்தால் இந்திய அமைதிப்படை மார்ச் 24,1990ஆம் ஆண்டுடன் முழுமையாக இலங்கையைவிட்டு வெளியேறியது. பிரேமதாசா விடுதலைப்புலிகளுக்கு தமிழீழத்தைத் தருவதாகக்கூறியே இந்திய இராணுவத்துடன் போரிடுமாறு பணித்தார். ஆனால் கூறியதை அவர்; செய்யவில்லை. இதன் காரணமாக விடுதலைப்புலிகள் பிரேமதாசாவினை இலக்குவைத்து கிராண்ட்பாஸ் சந்தியில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலை மேற் கொண்டிருந்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டார். தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தோடு அதிதீவிர மான யுத்தம் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் 1990ல் ஆரம்பித்து 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து இலங்கையில் ஒரு ஜனநாயக ரீதியிலான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அரசு செயற்பட்டபோதும் அப்போதைய எதிர்க்கட்சியும், சிங்கள தேசமும் சந்திரிகா பண்டாரநாயக்க பரம்பரையினரே இந்நாட்டை ஆட்சிசெய்யவேண்டும் என்கிற நோக்கில், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஆட்சி மாற்றம் ஒன்றிணையும் ஏற்படுத்தினர். மஹிந்த அவர்கள் ஆட்சியிலிருந்தபோது ஒன்றிணைந்த மாகாணசபை பிரிக்கப்பட்டு 09மாகாணங்களுக்கும் 09முதலமைச்சர்கள் என்கிற முறைமை கொண்டுவரப்பட்டது. உண்மையில் மாகாண சபையினை த.தே.கூட்டமைப்பு புறக்கணித்திருக்கவேண்டும். வடமா காணசபை என்பது தமிழ் மக்களுக்குப் பயனற்றதொன்றாகவேயிருக்கிறது. இந்திய இராணுவம் சுதுமலையில்வைத்து பிரபா கரனை இந்திய உலங்குவானூர்தி யின் மூலம் அசோகா ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று மாகாணசபையின் முறைமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அச்சுறுத்தினர். ஆனால் பிரபாகரன் மாகாணசபை எமக்குத்தேவையில்லை என இந்திய உயர் அதிகாரிகளிடம் மறுத்துப்பேசினார். தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய பிரபாகரனே இந்த மாகாணசபைத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அரசாங்கத்திடமிருந்து எலும்புத் துண்டுகளை மறைமுகமாகப் பெற்றுக் கொண்டவர்கள் மாகாண சபையினை ஏற்றுக்கொண்டதுதான் இன்று தமிழ் மக்களுக்குப் பெருந் தலையிடியாகவுள்ளது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வட-கிழக்கு மாகாணங்களில் கிழக்கில் முஸ்லீம் அதிகாரமும், வடக்கில் தமிழ் அதிகாரமும் காணப்படுகிறது. வடமாகாணத்தினைப் பொறுத்தவரை ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்கிற நோக்கில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்பட்டுவருவது என்பது சம்பந்தனின் கதிரையினைத் தட்டிப்பறிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது. அண்மைக்காலமான அவரது நடவடிக்கைகள் அவ்வாறே அமையப்பெற்றுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் வருவது வழக்கம். அதனைக் கட்சியிலுள்ளவர்களே தீர்த்துக்கொள்ளவேண்டும். அதனை விடுத்துப் பிறிதொரு கட்சியிலுள்ளவர்கள் கூறுவதைச் செவிமடுத்து கூட்டமைப்பின் ஒற்றுமையினைக்குலைக்க நினைப்பது என்பது த.தே.கூட்டமைப்பினை சின்னா பின்னமாக்கும் ஒரு நடவடிக்கையாகும். தமிழ் மக்கள் பேரவைக்குத் தலைமை தாங்கும் முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் 05வது கூட்ட அமர்வின்போது வடமாகாணசபையின் அமைச்சரவை மாற்றங்கள், த.தே.கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் அமர்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்த கருத்தானது அனை வருடைய அவதானத்தையும் பெற்றுள்ளது.

வடமாகாண அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக முதல்;வர் செயற்பட்டுவருவதன் நோக்கம் சிங்கள பேரினவாதத்துக்கு தாம் அடிபணியாத ஒருவர் என்பதைக் காட்டவா? ஏற்கனவே சிங்களப் பேரினவாதத்துடன் இரண்டறக்கலந்த முதல்வர் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயங்கள் தொடர்பில் அக்கறைகொள்வது போன்று செயற்பட்டாலும் சிங்களப் பேரினவாதிகள் அவரை ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை. ஆகவே பாசாங்கினைக்காட்டி வருகின்றார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாகச் செயற்பட்டவர் விக்னேஸ்வரன். த.தே.கூட்டமைப்பின் வழியே வந்து மாகாணசபைக்குத் தெரிவானவர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டமை அவர் த.தே.கூட்டமைப்பிற்குச் செய்த மாபெ ரும் துரோகச் செயலாகும். அவருடைய எதிர்பார்ப்பு எவ்வாறாகவிருந்ததெனில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழில் வெற்றிபெறுவார், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07ஆசனங்களைக் கைப்பற்றுவார், இவர்களுடன் இணைந்து தானும் தனது அரசியலை வளர்த்துக்கொள்ளலாம் என்பதேயாகும்.

ஆனால் இவரது கனவு தவிடு பொடியானது. என்னதான் பரப்புரைகளை முதல்வர் மேற்கொண்டாலும் முதல்வர் எதிர்பார்த்தபடி சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வெற்றிபெறவில்லை. இதனால் மனமுடைந்துபோன முதல்வர் விக்னேஸ்வரன் இதற்கு மாற்றீடாக ஏதாவது ஒன்றினைச் செய்யவேண்டும் என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்கி இன்று தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினையும் இத்தமிழ் மக்கள் பேரவையின் மூலமாக சீர்குலைத்து பூச்சாண்டி அரசியலையும் மேற்கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். த.தே.கூட்டமைப்பின் வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் விக்னேஸ்வரன். ஆனால் இன்றைய இவரது செயற்பாடுகளை தமிழ் மக்களாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது மாத்திரமல்ல. தற்போதைய வடக்கு அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் போன்றோரின் பதவிகளைப் பறிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வருகின்றார்.

தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களை அரசி யலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வருகின்றார். மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற இவருக்கான வாய்ப்பினை வழங்கியது த.தே.கூட்டமைப்புதான். வானத்தால் போன சனியனை ஏணி வைத்து இறக்கியவர்களும் த.தே.கூட்டமைப்பினர்தான். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக இவரது பெயர் த.தே.கூட்ட மைப்பினரால் அறிவிக்கப்பட்ட போது சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவர் என சம்பந்தனையும், சுமந்திரனையும் தவிர ஏனைய தமிழ்ப் பிரதிநிதி களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இவரை மிகக்கேவலமாக சித்தரித்தவர்களுள் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒருவர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தகாத வார்த்தைகளை இவர் மீது பிரயோகிக்காதது மாத்திரம்தான். இப்போது முதலமைச்சரின் வலது கையாக சுரேஸ் பிரேமச்சந்திரனும், இடது கையாக கஜேந்திரகுமார் அவர்களும் செயற்படுவது நகைப்பிற்குரிய விடயமாகும். சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பதவி வழங்கப்பட்டிருந்தால் தமிழ் மக்கள் பேரவை உருவாவதற்கான வாய்ப்புக்களே இருந்திருக்கமாட்டாது. சுரேஸ் பிரேமச்சந்திரனை தேசியப்பட்டியலில் த.தே.கூட்டமைப்பு உள்வாங்கியிருந்தால் அதிகமான விடயங்களைச் சாதித்திருக்கமுடியும். இதிலும் த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் தவறிழைத்திருக்கின்றனவென்றே கூற வேண்டும். த.தே.கூட்டமைப்பைப் பதிவுசெய்யும் விடயத்தில் தீவிரம் காட்டியவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். தற்போதைய நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களது மனங்களை வென்றெடுக்கும் நோக்கில் த.தே.கூட்டமைப்பின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு எதிரான முடிவு களை எடுத்து தமிழ் மக்களை தன்னோடு இணைத்துக்கொள்ளும் நோக்கில் அவரது அரசியல் காய்நகர்த்தல்களை நகர்த்தியுள்ளார். சிங்கள பேரினவாத அரசி னால் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை இவர் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்பேசும் மக்களாகிய நாமும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப் பெற்றதன் பின்னர் ஆசனங்களுக்காக அடித்துக்கொண்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் நீயா? நானா? என எதிர்ப்பினைக்காட்டுவது உகந்த தொன்றல்ல. ஆகவே முதலமைச்சரது செயற்பாடுகளைக்கண்டித்து அவரின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை த.தே.கூட்டமைப்பு எடுக்கத்தவறினால் தற்போதிருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களது அரசியல் பாதைக ளில் பாரியதொரு மாற்றம் நிகழ்த்தப்படும். ‘வெள்ளம் வருமுன் அணைகட்டுவதே’ த.தே.கூட்டமைப்புக்குச் சிறந்தது.

சுழியோடி

 

SHARE