
தற்போதைய அரசாங்கம் படைவீரர்களை வேட்டையாடுவதாகவும், எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடக் கூடாது எனவும் அரசியல் பழிவாங்கல்கள் நடத்தக் கூடாது எனக் கோரியும், விவசாயிகளக்கான நிவாரணங்களை நிறுத்தக் கூடாது எனக் கோரியும் கூட்டு எதிர்க்கட்சி கூட்டத் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாக கடந்த 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
அடுத்த கூட்டம் மே மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், எங்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்பது பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை திம்பிரிகஸ்யாய ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகாமையில் மே தினப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இந்த மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பது குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.