தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் கூட்டாக பங்கேற்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்தித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுமே காரணம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சமீபத்தில் பரபரப்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர் இதுபோன்ற கூறியது பா.ஜ.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்ஹா விருந்தினராக பங்கேற்றார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் திவாரி ஆகியோருடன் ஒரே மேடையில் அவரும் அமர்ந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் சின்கா பேசும் போது, “கெஜ்ரிவால் மற்றும் மனோஜ் திவாரியுடன் ஒரே மேடையில் அமர்ந்ததற்காக பா.ஜ.க என் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த நாளை என் வாழ்வின் மிகச் சிறந்த நாளாகக் கருதுவேன்.” என்று கூறினார்.
மேலும், “நான் மகாபாரதத்தில் வரும் சல்யன் என்று பிரதமர் மோடி விமர்சித்தார். பாண்டவர்களிடமிருந்து துரியோதனின் பேச்சை கேட்டு கௌரவர்கள் பக்கம் சென்றவர் சல்யன். ஆனால், துரியோதனனால்தான் அவர் கர்ணனனுக்குத் தேரோட்டியாக ஆனார்” என்று சின்கா தெரிவித்தார்.