கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம்:

381

 

 

கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி குறித்த விசாரணை காலத்திற்குள் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குமரன் பத்மநாதன் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு சுமார் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு மீண்டும் 2015 ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வழக்கு விசாரணையின் பின் மனுதாரர்களான மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி சுனில் வட்டகல,

“கேபி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின் போது கேபி தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி பிரியந்த நாவான்ன ஆஜராகியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மனு அடிப்படையில் கேபி தொடர்பில் 193 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரிந்த நாவான்ன தெரிவித்தார். 193 சம்பவங்கள் தேசிய, சர்வதேச குற்றங்கள் தொடர்பில் உள்ளன. விசேடமாக ரஜீவ் காந்தி கொலை, கப்பல் கொள்வனவு, தொழிற்சாலை, நிதி கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல சம்பவங்கள் உள்ளன. அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை அறிக்கை சமர்பிக்க குறுகிய காலம் போதாது அதற்கு ஆறு மாத காலம் தேவை என சட்டத்தரணி பிரியந்த நாவான்ன நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.

இந்த கருத்தை பரிசீலித்த நீதிமன்றம் எங்களிடமும் கருத்து பெற்றது. முறையான விசாரணை நடத்த ஆதரவு வழங்கப்படும் என நாமும் தெரிவித்தோம். அதன்படி இந்த வழக்கு ஆறு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. வழக்கு இனி 2015 ஓகஸ்ட் 31ம் திகதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய தினம் கேபி தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

கேபி வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்போது விடுத்துள்ள தடை உத்தரவு மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் இந்த நீண்ட காலத்தை எடுத்தாவது முறையான விசாரணை அறிக்கை சமர்பிக்கும் என நாம் நம்புகிறோம். நாட்டு மக்களுக்கு நியாயம் வழங்க கடந்த ஒரு மாதமாக நீதிமன்றமும் செயற்பட்டுள்ளது அதற்கும் கௌரவத்தை செலுத்துகிறோம்” என்றார்.

SHARE