சிறிலங்கா அரச படையினர் தமிழ் அரசியல் கைதிகளை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருக்கும் தடுப்பு முகாம்கள் குறித்த சில தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஜே.டி.எஸ் என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவார இறுதியில் வடக்கிற்கு விஜயம்செய்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நாட்டில் எந்தவொரு இடத்திலும் ரகசியதடுப்பு முகாம்கள் இல்லை என்று அடித்துக்கூறிய நிலையிலேயே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரகசிய முகாம்கள் குறித்த இந்தத் தகவல்கள் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் கடந்த பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாது காணாமல்போகச் செய்யப்பட்டிருந்த நான்கு பேரினது விபரங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும் வழங்கியுள்ளனர்.
கேப்பாப்புலவு ரகசிய தடுப்பு முகாம்
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசினது வேண்டுகோளுக்கு இணங்க சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை எந்தவிதத் தகவலும் இன்றி காணாமல்போகச்செய்யப்பட்டிருக்கும் தனது கணவரை தேடிகண்டுபிடித்துத் தருமாறு கோரி நீதிமன்றம் சென்றுள்ள அவரது மனைவி, முல்லைத்தீவிலுள்ள இராணுவ முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தனது கணவர் தொலைபேசியில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தனது கணவரான செல்லையா விஸ்வநாதனை தேடி கண்டுபிடித்துத் தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றம் சென்றுள்ள பாலநந்தினி விஸ்வநாதன், தனது கணவர் கேப்பாப்புலவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றிலேயே தனது கணவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது ஆட்கொணர்வு மனு நாளைய தினம் ஏப்ரல் முதலாம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கேப்பாப்புலவு ரகசிய தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர், அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்த போது தன்னுடன் சுமார் 50 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நபரும் 2009 ஆண்டிலேயே சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்திருக்கின்றார். ஜே.டி.எஸ் இடம் இருக்கும் அவரது உறவினர்கள் குறித்த மேலதிகள் விபரங்களை அவர்களது பாதுகாப்பு கருதி வெளியிடுவதில்லை என்று இணக்கத்திற்கு வந்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இரு தடவைகள் காணாமல்போகச் செய்யப்பட்டவர்
இதேவேளை கடந்த மூன்று வருடங்களாக எந்தவித விபரங்களும் தெரியாத நிலையில் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்த தனது மகனை சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் சிலர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துவந்துள்ளதாக அறிந்து அவரை பார்க்கச் சென்ற தாய், தனது மகன் மீண்டும் காணாமல்போகச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு காணாமல்போகச்செய்யப்பட்டிருந்த தனது மகனான ரவீந்திரன் மயூரன் கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில் முல்லைத்தீவு மாஞ்சோலை பொதுவைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்ததாக அவரரை நேரில் சந்தித்து உரையாடியுள்ள உறவினர்கள் தெரிவித்ததாக ரோஸ்மலர் என்ற தாயார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதை அறிந்து மறுநாள் காலையில் வைத்தியசாலைக்கு சென்று தனது மகனை தேடிய தாயாரிடம் அப்படி எவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
‘சிறுநீர் பரிசோதனைக்கென கூறி அழைத்துவரப்பட்டுள்ள ரவீந்திரன் மயூரன் குறித்த எந்தவித பதிவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என அவரை அழைத்து வந்த இராணுவத்தினர் வைத்தியசாலை பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும்’ தகவல்கிடைத்துள்ளது.
முல்லைத்தீவிலுள்ள முகாமொன்றிலேயே தான் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக மயூரன் அவரை சந்தித்த உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி தனக்கு கொடுக்கப்பட்டுவரும் துன்புறுத்தல்கள் காரணமாக தனது உடலுறுப்புக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உறவினர்களிடம் கூறியதாகவும் ரோஸ்மலர் என்ற அந்தத் தாயார் கூறுகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதான ஒரு குழந்தையின் தந்தையான ரவீந்திரன் மயூரன் என்ற இளம் குடும்பஸ்த்தரே தற்போது உயிருடன் இருப்பதாக அவாின் தயாா் கூறுகின்றார்.
இது குறித்து ரோஸ்மலர் என்ற மயூரனின் தாயாா் மேலும் தொிவிக்கையில்..
‘ரவீந்திரன் மயூரன் ரவீந்திரன் என்ற இளம் குடும்பஸ்த்தா் சித்திரை மாதம் 24 ஆம் திகதி செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியில் அமைந்திருந்த அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் இடம்பெயர்ந்த மக்களுடன் தங்கியிருந்தாா்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 5 ஆம் திகதி குறித்த முகாமில் இருந்து இராணுவத்தினரால் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவா் நெளுக்குளம் வுவுனியா சின்ன மாங்குளம்மற்றும் வெலிக்கந்த தடுப்பு முகாம்களில் மாறி மாறி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாா்.
பின்னர் வவுனிய தமிழ் மகாவித்தியாலயத்தில் வைத்து 2010 ஆம் ஆண்டு 11 மாதம்16 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டு கதிர்காமம் நலன்புரி நிலையத்தில் தனது மனைவி பிள்ளையுடன் வாழ்ந்து வந்தாா்.
குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக முகாமிலிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தாா்.அவ்வாறு வேலைக்கு சென்று வந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் 28 ஆம் திகதிஅவா் காணாமல் போயுள்ளார்.
அவா் காணாமல்போனமை தொடா்பாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம், மனித உாிமை அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பிடமும் முறையிட்டு பதில் கிடைக்காத நிலையில் கவலையுடன் இருந்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.
அவ்வாறு கவலையுடன் இருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலைவைத்தியசாலையில் வைத்து கண்டதாக உறவினா்கள் சிலா் கூறினர்..
2015 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் 27 ஆம் திகதி காலை 10 மணியளவில் வைத்தியசாலைக்குசிறுநீர் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் மயூரனை கண்டு உரையாடியதாக உறவினா்கள் சிலரும் அயலவா்கள் சிலரும் தொிவித்தனர்.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனை காரணமாக உடல் உறுப்புக்களில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் பாிசோதனைக்காக தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவா்தனது அவல நிலையை உறவினா்களிடம் கூறியதாகவும்’ தாயாா் கூறியுள்ளார்.
இதேவேளை மயூரனுடன் மேலதிகமாக உரையாட முடியவில்லை எனவும் அவரை அழைத்துவந்தவர்கள் அருகில் வந்தவுடன் அவர் தம்முடன் பேசுவதை நிறுத்தியுதாகவும் உறவினா்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அவர் மயூரனை அடையாளம் கண்டு உரையாடிய உறவினா்களில் சிலர் அவா் காணாமல்போய் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக கருதியதாகவும் இதனால் அவரை கண்டதும் எப்போது விடுதலை செய்யப்பட்டாய் என்று கேட்டதாகவும் தொிவித்தார்.
இதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சிறிலங்கா அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞர் ஒருவர் இம்மாதம் சிறிலங்கா அரச படையினரின் தடுப்பில் இருந்ததை கண்டதாக அவரது உறவுச் சகோதரியொருவர் அவரது தந்தையாரிடம் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய தேவராசா ஜெகதீபன் என்ற தனது சகோதரர் ஒட்டுசுட்டான், சம்மன்குளம் பிரதேசத்தில் இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினருடன் இராணுவ சீருடைக்கு ஒத்த உடையில் இருந்ததை கண்டதாக ஜெகதீபனின் பெரியப்பாவின் மகள் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன தனது சகோதரனை பல ஆண்டுகளுக்குப் பின்னர் நேரில் கண்டும் அவருடன் கதைக்க முடியாத துர்ப்பாக்கியநிலையில் இருந்ததாக மகள் கூறியதாக ஜெகதீபனின் பெரியப்பா தெரிவித்துள்ளார்.
காணாமல்போகச்செய்யப்பட்டுள்ள ஜெகதீபன் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை செஞ்சிலுவைக் குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெகதீபனுடன் இருந்த இராணுவப் படையணி எது என்ற விபரங்களை தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
( ஜெகதீபனின் பெரியப்பா )
யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்த நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக வவுனியா மெனிக்பாம் முகாமிலிருந்து மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு எஞ்சியிருந்தோர் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிழக்கில் காடுகள் அழிக்கப்பட்டு மீளக்குடியேற்றப்பட்டனர்.
எனினும் கேப்பாப்புலவு அரசினர் தமிழ் மகா வித்தியாலயம் உட்பட மக்கள் வாழ்ந்த கேப்பாப்புலவு கிராமம் இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனர். சிறிலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணி கேப்பாப்புலவு கிராமத்தில் பாரிய படைமுகாமொன்றை அமைத்துள்ளதாக அப்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.
நீதியான விசாரணைகள்
எவ்வாறாயினும் நாட்டில் எந்தவொரு ரகசிய தடுப்பு முகாம்களும் இல்லை என்று யாழ்ப்பாணத்திற்கு கடந்தவார இறுதியில் விஜயம்செய்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பிட்டிருந்தார். ‘அவ்வாறான முகாம்கள் இருக்குமொன்றால் எந்தவொரு இடத்திற்கும் சென்று பாருங்கள்’ என்று 27 ஆம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.
எனினும் பிரதமரின் இந்தக் கூற்றுக்களை நிராகரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படுமாயின் தன்னிடம் இருக்கும் சாட்சியங்களை வழங்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள கோட்டாபய என்ற ரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அடித்துக்கூறும் நிலையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த அறிவிப்பையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.