கேரளாவில் ‘பைரவா’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால், ‘மெர்சல்’ வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
‘மெர்சல்’ தலைப்புக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்ததைத் தொடர்ந்து, படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. அக்டோபர் 18ம் தேதி வெளியீடு என்பதால், வெளிநாட்டுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு ஜனவரியில் விஜய் நடித்த ‘பைரவா’ வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விப் படமாகவே அமைந்தது. விஜய் படங்களுக்கு கேரளாவில் பெரிய வசூல் இருக்கும். ஆனால், அங்கும் ‘பைரவா’ படுதோல்வியை சந்தித்தது.
‘மெர்சல்’ கேரளா வெளியீட்டு உரிமையை குளோபல் யூனைடெட் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால் அங்குள்ள விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, ’பைரவா’ தோல்விக்கான கணக்குவழக்குகளை முடித்தவுடனேயே ’மெர்சல்’ படத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இப்பிரச்சினையை விரைவில் பேசித் தீர்க்கப்படும் என்று குளோபல் யூனைடெட் மீடியா நிறுவனம் சார்பில் தெரிவித்தார்கள்.
’மெர்சல்’ படத்தின் 2 ப்ரோமோக்கள் ‘பாகுபலி 2’ தொலைக்காட்சி திரையிடலோடு விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.