கொசோவாவின் தங்க மகள்

186

லிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம்.எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமலேயே போய் விடுகின்றன.இந்தியா கூடவும் அப்படித்தானே. ஆனால் கொசோவோ என்ற குட்டிநாடு, பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கில்  அதுவும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் இரு நாடுகள் புதுமுகங்களாக களம் கண்டன. ஒன்று, ஐரோப்பிய நாடானா கொசோவா; மற்றொன்று தெற்கு சூடான். செர்பியாவின் பிடியில் இருந்த கொசோவா,  கடந்த 2008 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. கடந்த இரு வருடங்களுக்கு முன்புதான் கொசோவாவை தனிநாடாக ஏற்று,  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரித்தது. இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் கொசோவாவின் கனவு நிறைவேறியது.

சிறிய நாடான கொசோவா,  8 பேரைக் கொண்ட ஒரு  அணியைத்தான் ரியோ ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருந்தது. அணியில் இடம் பெற்ற எட்டு பேருமே ஒவ்வொரு விஷயத்தில் கில்லிகள்.  அவர்களில் ஒருவர்தான் 25 வயது மஜிலிண்ட் கெல்மெண்டி.  ஜூடோவில், மகளிர் 52 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில், இத்தாலியின் கஃப்ரிடியை வீழ்த்தி கெல்மெண்டி தங்கம் வென்றுள்ளதன் மூலம்,  ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் கொசோவாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 

”நாங்கள் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்தவர்கள். எங்கள் நாடு வெறும் போர்களை மட்டும் சந்திக்கும் நாடு மட்டுமல்ல. திறமையாளர்கள் நிறைந்த நாடு என்பதை இந்த உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். வாழ்க்கை சிதைந்து போன  நிலையிலும்  எங்களால் சாதிக்க முடியும் என்று நம்பினேன். தற்போது அதனை நிறைவேற்றியுள்ளேன்.

எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள், தங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா எனக் கூடத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.  கல்விக்கு வழி கிடையாது. படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது. அத்தகைய ஏழ்மை நிலையில் நாங்கள் வாழ்கிறோம். அதனால் இந்த வெற்றி எங்களுக்கு மகத்துவமானது. எங்கள் நாட்டிற்கே இது மிகப்பெரிய வெற்றி. ஒட்டுமொத்த கொசோவாவும் நான் வெற்றி பெற வேண்டுமென விரும்பியது, வேண்டியது, வாழ்த்தியது. அதுவே என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது” என்கிறார் நீர் வழியும் கண்களோடு கெல்மெண்டி.

பதக்கப்பட்டியலில்  கொசோவாவின் பெயரை பார்த்து பார்த்து ஆனந்தமிகுதியால் கண்ணை கசக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்த நாட்டு மக்கள்.

 

SHARE