கொடூரத்தின் உச்சக்கட்ட தண்டனை

167

பாகிஸ்தானில் ஒரு பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்ட காரணத்தால் சிறுவனின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவனுக்கு, அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை, சில அடியாட்களை அழைத்துக்கொண்டு அச்சிறுவன் படித்து வந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார்.

பள்ளியை விட்டு அச்சிறுவன் வெளியே வந்தபோது, அவர்கள் அவனை தூக்கிசென்று, கம்புகளை வைத்து தாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், அவனது கண்களை தோண்டியெடுத்துவிட்டு அப்படியே ரோட்டில் போட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அச்சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவனுக்கு கண்பார்வையை திருப்பி கொண்டுவரமுடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பொலிசில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அந்தப் பெண்ணின் தந்தைக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற சிறுவனின் தந்தை, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக லாகூர் மூத்த பொலிஸ் அதிகாரி ஹைதர் அஷரப் தெரிவித்துள்ளார்.

SHARE