கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

284
கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சேயா செவ்தம்மினி கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் மற்றுமொரு குடும்பஸ்தர் ஆகியோரை சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, கொட்டாதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தீர்மானித்துள்ளார்.

பாடசாலை மாணவர் மற்றும் ஏனைய நபர் ஆகியோர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் மா அதிபரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கொட்டாதெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

சந்தேக நபர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்து தாக்கியமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்களின் பெறுமதி மிக்க பொருட்களையும் காணவில்லை என விசாரணைகளின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

sadeumi

SHARE