கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…கொரியாவிற்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக சென்ற 6000 இலங்கையர்கள் தாம் தொழில் செய்யும் இடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த நிலைமை பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் எவரும் வேறும் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவ்வாறு தொழில் செய்யும் இடங்களிலிருந்து தப்பிச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த புதிய திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்று புகலிடம் கோரும் இலங்கையர்கள்
கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் 13 பேர் பல்வேறு காரணங்களைக் காண்பித்து அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் காரணத்தினால் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பிற்கான வீசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து. அமைச்சர் தலதா அதுகோரலவும் அதிகாரிகளும் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து மீளவும் வீசா வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்று அங்கு வேறும் காரணங்களைக் காட்டி புகலிடம் கோருவோருக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என நாடுகளிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கோரியுள்ளது.
சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுவது பொருத்தமற்றது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.