தொழில் வாய்ப்பை பெற்று கொரியா சென்ற இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்துகம, யட்டதொலவத்த பகுதியை சேர்ந்த பீ.எம்.ஏ.அநுர கிரிஷாந்த என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுளளார்.
அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரிஷாந்தவின் மனைவி,
கடந்த வருடம் ஜுன் மாதம் தொழிலுக்காக கொரியா சென்றார். அவர் கொரியாவில் ஹேனாம் என்ற நகரின் கடலுக்கு அருகில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தொழில் செய்துள்ளார். அவர் அங்கு சென்ற நாள் முதல் தினமும் தொலைப்பேசியில் உரையாடுவார்.
இறுதியாக கடந்த 2ஆம் திகதி இரவு 7 மணியளவில் அவர் எங்களுடன் தொலைப்பேசியில் உரையாடினார். 3ஆம் திகதி கொரியாவில் இருந்து அவரது நண்பர் தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தி, தொழிலுக்காக கப்பலில் சென்ற போது கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். தற்போது அவர் தொழில் செய்த நிறுவனம் மற்றும் கொரிய அரசாங்கம் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பின்னர் நான் இது தொடர்பில் பொலிஸார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்தேன். அவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தேன்.
எனினும் அவரை தேடுவதற்கு ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் தற்போது இல்லை என கொரியாவில் உள்ள அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நண்பர்களின் தலையீட்டில் தொடர்ந்தும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. மூத்த மகளுக்கு நான்கு வயதாகின்றது. சிறிய மகனுக்கு ஒன்றரை வயதாகின்றது. நான், குறித்த பிரிவுகளின் அதிகாரிகளிடம் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எனது கணவரை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரியுள்ளதாக கிரிஷாந்தவின் மனைவி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.