பொரளை, கனத்தை சந்திக்கு அருகே உள்ள குறுக்கு வீதியொன்றிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கபில நிற ஜீப்வண்டி மீது, வீதியோரத்தில் இருந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதை தான் கண்டதாக நபர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
கறுப்பு நிற பிரயாணப் பைக்குள் இருந்து குறித்த நபர் துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்துவது முதல் அவர் தப்பிச் சென்றது வரை அத்தனை விடயங்களையும் தான் நேரில் கண்டதாகவும் அதனை உடனடியாக 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவித்ததாகவும் அவர் நேற்று சாட்சியமளித்தார்.
குவைட் எயாவேய்ஸ் விமான சேவை நிறுவனத்தின் விமான சேவையாளராக கடமையாற்றும் வினோத் ஜோஸப் அஞ்சலோ ரோய் என்ற 27 வயதான நபரே நேற்று புதுக்கடை 9ம் இலக்க மன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் போது நீதிவான் திலிண கமகே முன்னிலையில் இவ்வாறு சாட்சியமளித்தார்.
நீதிமன்ற உதவியாளரினால் வாசித்துக் காட்டப்பட்ட சாட்சியத்தை ஏற்றுக்கொண்டதன் ஊடாக அவர் இந்த சாட்சியத்தினை வழங்கினார்.
கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜ் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி 9 சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டனர். இவர்களில் 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹெட்டியாராச்சிகே சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சந்தன, சம்பத் முனசிங்க ஆகிய 4 கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராகவும் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பெமியன் ஹுசேன் என்ற பொலிஸ் அதிகாரிக்கும் கருணா குழுவை சேர்ந்தவர்கள் என கருதப்படும் பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகியோருக்கும் எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
கைதாகிய மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச சாட்சியாக மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்த வழக்கு புதுக்கடை 9ம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிபதி திலிண கமகே முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி தற்போது இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் வழக்கின் 4வது சாட்சியாளரான அஞ்சலோ ரோயின் சாட்சியம் விசாரிக்கப்பட்டது.
வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்ட வாதி டிலான் ரத்நாயக்கவின் மேற்பார்வையில் குற்றப் புலனயவுப் பிரிவின் அதிகாரிகள் நான்காவது சாட்சியாளரின் வாக்கு மூலம் அடங்கிய அறிக்கையினை நீதிவானுக்கு சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்ட சாட்சியளர், தான் வழங்கும் சாட்சியம் உன்மையானது என சத்தியம் செய்த பின்னர், நீதிமறஉதவியாளரால் அவரது சாட்சி வாக்கு மூலம் பகிரங்க நீதிமன்றில் அவருக்கு வாசித்து காட்டப்பட்டது.
அவரது சாட்சியத்தில் சில இடங்களில் கேள்வி பதிலாக சாட்சியம் அமைந்திருந்தது.
வினோத் ஜோஸப் அஞ்சலோ ரோய் என்ற நான் 27 வயதுடையவன். குவைட் எயார்வேஸ் விமான சேவை நிறுவனத்தில் விமான சேவை உதவியாளராக தற்போது பணியாற்றுகின்றேன்.
இச்சம்பவம் கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்றது. நான் எனது பணி தொடர்பில் 2006 நவம்பர் 9ம் திகதி இங்கிருந்து சென்று மீன்டும் 2006 நவம்பர் 10ம் திகதி அதிகாலை இங்கு வந்தேன்.
குவைட்டில் இருந்தே எமது நிறுவனம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை. அன்றும் அப்படி செய்யப்பட்டிருந்தது.
அன்று வெள்ளை நிற டொல்பின் ரக வான் ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. அந்த வானின் சாரதியின் பெயர் நிஸங்க. நானும் என்னுடன் வேலை செய்யும் எனது நண்பன் அன்சிலும் கட்டுநாயக்கவில் இருந்து வீட்டுக்கு அந்த வானிலேயே செனறோம்.
அன்ஸில் ஜாஎல பகுதியில் வசித்ததால் முதலில் அவரது வீட்டுக்கே சென்றோம். செல்லும் போது அன்சிலே சாரதிக்கு அருகில் இருந்தார். நான் பின் பக்க ஆசனத்தில் இருந்தேன். அன்சிலின் வீட்டுக்கு சென்ற போது அங்கு ஒரு சில நிமிடங்கள் நாம் தேனீர் விருந்துக்காக கழித்தோம். பின்னர் அன்ஸிலை விட்டுவிட்டு நான் தெஹிவளையில் உள்ள எனது வீடு நோக்கி அந்த வானில் சென்றேன்.
பொரளை ஊடாகவே இவ்வாறு செனறோம். இதன் போது பொரளை கனத்தை சந்திக்கு அருகே குறுக்கு வீதியூடாக கபில நிற ஜீப் வண்டியொன்று பிரதான பாதையை நோக்கி நுழைந்தது.
பிரதான பாதையை நோக்கி ஜீப் வந்ததால் எமது வான் வேகத்தை குறைத்து அதற்கான இடத்தை வழங்கியது. இதன் போது அங்கு நடைபாதை பகுதியில் கறுப்பு நிற பையொன்றுடன் நின்றிருந்த நபர் ஒருவர் அதனுள் இருந்து துப்பாக்கியை எடுத்து அந்த கபில நிற ஜீப் வண்டியின் பின்பக்க ஆசனத்தை நோக்கி சரமாரியாக துப்பககிச் சூடு நடத்தினார்.
அதன் பின்னர் நடைபாதை வழியே சுமார் 50 மீற்றர்கள் வரை ஓடிச் சென்று இயங்கு நிலையில் கறுப்பு நிற தலைக்கவசத்துடன் காத்திருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அவர் தப்பிச் சென்றார். நாரஹேன்பிட்டி பகுதியை நோக்கியே அவர்கள் சென்றனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. எனினும் சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்துக்கொண்டோம்.எஸ்.பி.ஜே.இ.6507 என்பதே அந்த இலக்கம். ‘ அதோ போகிறது மோட்டர சைக்கிள்… அதோ போகிறது… இலகத்தை குறித்துக்கொள் என நான் சாரதிக்கு கூறவே அவர் பேனையை எடுத்து அவரது லொக் புத்தகத்தில் அந்த இலக்கத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் பொலிஸ் கராஜ் பகுதியை அடைந்த நேரம் எனது 0777393922 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து 119 பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, நாரஹேன்பிட்டி பகுதியில் ஜீப் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையும் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் கொடுத்தேன்.
அத்துடன் அங்கிருந்து நகரும் போது கண் எதிரே பட்ட விமானப்படை மற்றும் அதிரடிப்படை வீரர்களை உள்ளடக்கிய ஜீப் வண்டி ஒன்றினையும் நிறுத்தி அவர்களிடமும் விடயத்தை கூறினோம்.
கேள்வி: அப்போது நேரம் என்ன?
பதில்: உறுதியாக தெரியாது. சுமார் 8.20 இருக்கும்.
கேள்வி: துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உருவ அமைப்பு எப்படி இருந்தது?
பதில் : 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவராக இருப்பார். நல்ல உடல் அமைப்பை கொண்டிருந்தார். வெள்ளை நிறத்தவர். கறுப்பு நிற தலை மயிர் கொண்டவர். வட்ட வடிவான முகம். முகத்தை மறைத்திருக்கவில்லை. நீண்ட காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார். சப்பாத்தும் போட்டிருந்தார்.
கேள்வி: அந்த நபரை மீண்டும் கண்டால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
பதில்: ஆம்
கேள்வி: துப்பாக்கி பிரயோகம் செய்யும் போதே தோளில் பிரயாண பை இருந்ததா?
பதில்: இடது பக்க தோளில் போட்டிருந்த கறுப்பு நிற பையிலிருந்து எடுத்தவாறே அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதன் போது அந்த பை கீழே விழுந்தது. அவர் ஜீப்பின் அருகில் சென்று சுட்டார்.
கேள்வி: எத்தனை சூடுக்கள் நடத்தப்பட்டன. உமக்கு சத்தம் கேட்டதா?
பதில்: ஆம்.. சத்தம் கேட்டது. எனினும் எத்தனை சூடுகள் என எண்ணவில்லை. எனினும் சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கேள்வி: மோட்டார் சைக்கிளில் இருந்தவரை அடையாளம் தெரிந்ததா?
பதில்: இல்லை. அவரின் பின் பக்கமாகவே நான் பார்த்தேன். அவர் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்திருந்தார்.
கேள்வி: அந்த மோட்டார் சைக்கிளின் நிறம், ரகம் ஞாபகத்தில் உள்ளதா?
பதில்: நிறம் ஞாபகத்தில் இல்லை. பின்னால் இருந்து பார்த்ததற்கமைய அது பல்சர் மோட்டார் சைக்கிள் என நினைக்கின்றேன்.
கேள்வி: ஜீப்பில் இருந்தவர் யார் என அறிந்து இருந்தீரா?
பதில்: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதில் இருந்தவர் யார் என தெரியாது. எனினும் வீட்டுக்கு சென்றபோது தான் தொலைக்காட்சி ஊடாக நடராஜா ரவிராஜ் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்ப்ட்டுள்ளதை அறிந்தேன். என்றார்.
இதனையடுத்து வாசித்துக் காட்டப்பட்ட சாட்சியம் சரியானதா, அதில் ஏதும் சேர்க்கப்பட அல்லது நிராகரிக்கப்பட வேண்டி உள்ளதா என நீதிவான் திலிண கமகே சாட்சியாளரிடம் கேட்டார். அதற்கு சாட்சியம் சரியானதே என பதிலளித்தார்.
சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளும் சாட்சியாளரை விசாரிக்க தேவையில்லை என தெரிவித்து சயட்சியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் வழக்கானது நீதிவானினால் எதிர்வரும் மார்ச் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.