முன்னாள் போராளிகளை கைது செய்வதும், முன்னாள் போராளிகளை இம்சைப்படுத்துவதும், முன்னாள் போராளிகளின் குடும்பத்தை திடீரென்று சுற்றிவளைப்பு செய்வதுமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது – பா.அரியநேத்திரன்

236

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்)

 

கேள்வி : வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிசார் சுடப்பட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளது உறவினர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அது தற்போது முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தற்பொழுது அங்கு நிலைமைகள் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே உங்களுடைய கருத்து என்ன?

 

 

 

 

பதில் : உண்மையில் மாவீரர் தினத்திற்கு அடுத்த நாள் நள்ளிரவில் தான் பொலீஸார் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். ஒருவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்த ஒரு இளம் பொலீஸ் உத்தியோகஸ்தர் இன்னொருவர் காலியைச் சேர்ந்த பொலீஸ் உத்தியோகஸ்தர். உண்மையில் இந்த பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில் பொலீஸாரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எல்லாம் எல்லோரும் அறிந்த விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஆனால் அதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு முன்னாள் போராளிகளை கைது செய்வதும், முன்னாள் போராளிகளை இம்சைப்படுத்துவதும், முன்னாள் போராளிகளின் குடும்பத்தை திடீரென்று சுத்திவளைப்பு செய்வதுமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்ற அஜந்தன் என்பவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் அதில் பிறந்து 45 நாள் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட காந்தி சதுக்கத்திலே ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். உண்மையில் அவர் தனது கணவனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை. அதில் எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை. ஏனென்றால் அப்பாவியாக இயல்பு வாழ்க்கையிலே இருந்த தன்னுடைய கணவனை இவ்வாறு திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்துடன் முடிச்சுப் போட்டு தனது கணவர் கைது செய்யப்பட்டதாக தான் அவர் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உண்மையில் அந்த கோரிக்கையை பார்த்த எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய மட்டக்களப்பு மாநகர முதல்வர் அவர்கள் மனிதாபிமான முறையிலே அதை அணுகி அதற்கான தீர்வை எவ்வாறு கொடுக்கலாம் என்பதை அவர்கள் ஆலோசித்த போது அது சட்ட ரீதியான ஒரு பிரச்சினையாக இருக்கின்றதன் காரணமாக சட்ட ரீதியாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அந்த தாயை நள்ளிரவில் அந்த இடத்திலிருந்து அவரின் பிரதேசத்தின் பிரிவிலே இருக்கக் கூடிய அந்த குடும்பத்தின் இல்லத்திற்கு அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வானிலே கொண்டு சென்று விட்டார்கள்.
அந்த தாயின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த தாய் தனியாக நள்ளிரவிலே பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு ஒரு பொது வெளியிலே உண்ணாவிரதம் இருப்பது என்பதும் இதற்கு எதிராக அல்லது அதற்கு மாறாக அவருக்கு ஏதாவது ஒரு உயிர் ஆபத்து அல்லது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு விபத்துக்கள் அல்லது ஏதோ ஒரு நிகழ்வு இடம்பெறுமாயின் அதற்கு பதில் சொல்ல வேண்டிய விடயங்கள். அதை கண்டும் காணாமல் இருக்க முடியாது என்பதற்காகவும் தான் மட்டக்களப்பு மாநகர மேயர் அவர்கள் அவரை பாதுகாப்பாக இல்லத்திற்கு அழைத்துச்சென்றாரே தவிர, எக்காரணம் கொண்டும் அதை உதாசீனம் செய்வதற்காகவோ அல்லது அவரின் கோரிக்கையை மழுங்கடிக்க அவர் செய்யவில்லை.

ஆனால் சட்ட ரீதியாக அடுத்த நடவடிக்கையாக என்ன மேற்கொள்ளலாம். அவரை எவ்வாறு விடுதலை செய்யலாம்; என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. ஆனால் இதில் இருக்கின்ற பின்விளைவை பார்க்கின்ற போது உண்மையில் இந்த கொலை குற்றத்திற்கு யார் பயன்படுத்தப்பட்டார்கள். இதுவரையில் அந்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களை நாங்கள் பார்க்கின்ற போது அவர்களிடமிருந்து இந்த தரவுகளை எடுத்தார்களா, இல்லை ஆயுதங்களை எடுத்தார்களா? என்பது இதுவரை செய்தியில் வரவில்லை. ஆனால் முன்னாள் போராளிகள் மாவீரர் தினத்திற்கு கலந்துகொண்டு மாவீரர் துயிலும் இல்லம் காந்தி சதுக்கம் வவுணதீவில் பொலீஸார் கூடாரங்களை அகற்றியதன் நிமித்தம் சில கருத்து வேறுபாடுகள் இங்கு இடம்பெற்றிருக்கின்றது. அதற்காக பணிவார்களா என்ற கேள்வி கூட பொது மக்களிடையே எழுந்திருக்கின்றது. அதற்கு பின்னர் படுவான்கரை பகுதியிலே பல்வேறுபட்ட கிராமங்களிலேயே சில இடங்களிற்கு திடீரென்று இராணுவத்தினர் சென்று முன்னாள் போராளிகளை அச்சுறுத்தல் செய்கின்ற பாணியிலே அவர்களை அடையாள அட்டைகளை எடுப்பதும் அவர்களை விசாரிப்பதுமாக ஒரு பீதியை உண்டாக்குவதுமே இதற்கு பிற்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் இந்த புனர்வாழ்வு பெற்ற இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற முன்னாள் போராளிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் ஒரு நன்றி கெட்ட விடயமாக இருக்கின்றது. அதற்காக குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றதில் மாற்றுக் கருத்து இல்லை. பொலீஸாரின் படுகொலை சம்பவத்தை சாட்டாக வைத்துக்கொண்டு திட்டமிட்டு ஒவ்வொரு விதமாக முன்னாள் போராளிகளையும் இளைஞர்களையும் அச்சுறுத்துகின்ற அல்லது சுத்திவளைப்பு செய்கின்ற விசாரிக்கின்ற ஒரு பீதியே இந்த நிகழ்விற்கு பின்னால் ஏற்பட்டிருக்கின்றது. இது உண்மையிலேயே நிறுத்தப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

அதேநேரத்தில் அந்த தாயார் கூறுகின்ற அஜந்தன் என்ற போராளி தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அங்கே குடும்பத்தில் அவர்கள் தான் உழைக்கிறார்கள். மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற ஒரு முன்னாள் போராளி என்று நினைக்கின்றேன். மிகவும் வறுமையிலும் மற்றும் பாடசாலை செல்கின்ற அந்த வயதிலே அந்த பிள்ளைகள் தந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இவற்றை மனிதாபிமான முறையிலே அணுகி சம்பந்தப்பட்ட கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும். விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு குற்றங்கள் இருக்குமாக இருந்தால் குற்றத்தின் ரீதியில்; தண்டிக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர் இன்னும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குக் காட்டப்படவில்லை. எங்கு இருக்கின்றார்கள் என்றும் கூட தெரியாத நிலை தொடர்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான நடவடிக்கையை பார்க்கின்ற போது மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றதற்கு பிற்பாடு யார் அந்த படுகொலையை செய்தார்கள் என்பதையும் எதற்காக அந்த படுகொலை செய்யப்பட்டது என்பதையும் விசாரிக்கவேண்டும். கடந்த மாவீரர் தினத்தில் அவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதற்காக அதனுடன் சேர்த்து முடிச்சுப்போட்டு பீதியை உண்டாக்கும் வகையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதா? என்பது ஆராயவேண்டிய விடயமாக இருக்கின்றது. எனவே இது தான் மட்டக்களப்பு பிரதேசத்தில் தற்போது இடம்பெறுகின்ற விடயமாக இருக்கின்றது.

தொடரும்……..

SHARE