கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

423

 

கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

குறித்த இராணுவ தலைமையக பணிகளுக்கான நிதிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கட்டடத்துக்கான சரியான மதிப்பீடு கிடைத்த பின்னரே அதற்கான நிதியை விடுவிக்க முடியும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடத்துக்காக அமைச்சரவை எந்தளவு நிதியை ஒதுக்கியது? திட்டத்துக்கான ஒதுக்கீடு எவ்வளவு என்ற விடயங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு தகவலின்படி 50 பில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது குறித்து சரியான விளக்கங்கள் இல்லை.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இந்த திட்டத்துக்காக 20 பில்லியன் ரூபாய்களுக்கான நாடாளுமன்ற ஒப்புதலை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

பாதுகாப்புத் தலைமையகம் அமைக்கும் பணிகள் ரத்து செய்ய நேரிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 13ல் சிரில் சீ பெரேரா மாவத்தையில் நடைபெற்ற குறைந்த வசதியுடையவர்களுக்கான வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் பாதுகாப்பு தலைமையகம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இது அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனை விடவும் செலவு கூடிய ஒன்றாகவே அமைக்கப்படவிருந்தது.

அத்துருகிரிய பிரதேசத்தில் 5000 கோடி ரூபா செலவில் இந்த பாதுகாப்புத் தலைமையகம் அமைக்கப்படவிருந்தது.

இந்த நிர்மாணப் பணிகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு அப்பாவி பொதுமக்களுக்கு விடுகளை அமைத்துக் கொடுக்க முடியும்.

பாதுகாப்புத் தலைமையகத்தை அமைக்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

தலைமையகத்தை அமைப்பதற்கு 5000 கோடி ரூபா செலவாகும் என்றால் அதற்கான விலைக் மனுக் கோரல்கள் கோரப்பட்டதா?

போலியான நோக்கங்களுக்காக அபிவிருத்தித் திட்டங்களை அனுமதிக்க முடியாது.

இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை ரத்து செய்து அதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை வழங்கவே திட்டமிட்டுள்ளோம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

SHARE