அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களுக்கு இனிமேல் எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
அவசர அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் காணிகள் நிரப்புதலையும் முற்றாகத் தடை செய்யுமாறு ஜனாதிபதி அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சீரற்ற காலநிலையால் எதிர்பாராத விதமாக முழு நாடும் எதிர்நோக்கிய அனர்த்த நிலைமைக்கான முக்கிய காரணம் அனுமதி பெறப்படாத குடியிருப்புக்களும் காணிகளை நிரப்புதலுமாகும் என அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளன.
இதுதொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு ஒட்டுமொத்த மக்களும் மீண்டும் இவ்வாறானதோர் இன்னலை எதிர்கொள்ளாத வகையில் அரசாங்கத்தின் பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினாலும் இடர்களை எதிர்கொண்ட பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வீடுகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு முன்னதாக அவற்றை உரிய தொழிநுட்ப ரீதியான பரிசோதனைக்கு உட்படுத்துமாறுத் ஜனாதிபதி இதன் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.