கோட்டபாய முகாமிற்கு இராணுவம் நிரந்தர வேலி

274

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய முகாமிற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 671 ஏக்கர் காணி, 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் கோட்டாபய முகாம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், வட்டுவாகல் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதும், இந்த முகாமிற்கான நிரந்தர வேலி அமைக்கும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக குறித்த முகாமிற்கு நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு பகுதியில் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளன.

எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பினை அடுத்து அண்மையில் மேற்கொள்ளவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இராணுவத்தின் நிரந்தர வேலி அமைக்கும் செயற்பாட்டிற்கு பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், கடற்படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதற்காக, நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.mulimuli01

SHARE