முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் நேற்றைய தினம் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைகள் தொடர்பில் நேற்றைய தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன் போது அவன்ட் கார்ட் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரிடம் விரிவாக விசாரணை நடாத்தவும், அதற்காக அவரை கைது செய்து தடுத்து வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதன் பின்னர் கோதபாய ராஜபக்ஸ கைது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
நிறைவேற்றுப் பேரவையின் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்த ஜயரட்ன நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதியளித்தல், அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் தகவல்களை மறைக்க பணம் வழங்கியமை, ஆயுதங்களை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கோதபாயவை கைது செய்வதனை ரணில் விக்ரமசிங்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது அலரி மாளிகைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று கோதபாயவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதுவும் அவரை கைது செய்யக் கூடாது எனபதுவும் என தெரிவிக்கப்படுகிறது.