கோத்தபாயவை விட இவரே அரசியலுக்கு தகுதியானவர்! குமார வெல்கம

166

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விட, பசில் ராஜபக்சவே அரசியலுக்கு மிகவும் தகுதியான நபர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நிலைமையை உருவாக்கியவர் பசில் ராஜபக்ச எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது உறவினர் என்ற போதிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்ற வகையில், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதையோ, நாட்டின் தலைமைத்துவதிற்கு வருவதையோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜனநாயக வேட்பாளரை பெயரிடுவது மகிந்த ராஜபக்சவின் பொறுப்பு எனவும், அப்படியான தலைவருக்கு அதிகப்பட்ச ஒத்துழைப்பை தான் வழங்க தயாராக இருப்பதாகவும், 19ஆவது திருத்தச் சட்டத்தில் 3ஆவது முறையாக போட்டியிட முடியாது என்ற பந்தியை நீக்க நடவடிக்கை எடுத்து, மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வரும் முனைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE