கௌரவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வர வேண்டும்!- கௌசல்யா அறைகூவல்

228

கெளரவக் கொலை என்பது சாதியம் உருவாக்கியிருக்கிற புதுமாதிரியான ஒரு குற்ற வகை. அதன் இரத்தச் சாட்சியம் நான்.

தந்தை பெரியார் என்னுள் சம்மணமிட்டு அமர்ந்து விட்டார். பெண்ணியத்தின் வாழும் சாட்சியாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.

அந்த உணர்வு இல்லாமல், சாதியக் கெளரவக் கொலைகளுக்கு எதிராக என்னால் போராட முடியாது என்று உறுதிமிக்க குரலில் மிகத்தெளிவாகப் பேசுகிறார் கௌசல்யா.

உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, இப்போது சாதிக்கொடுமைகளுக்கு எதிராக வாள் வீசும் போராளியாக உருவெடுத்துள்ளார்.

மாணவப் பத்திரிகையாளர் திட்டம் கூட்டுப் பயிற்சி முகாமில் அவர் பேசினார். அதன் சாராம்சம்…

வெறும் இருபது வயதில், இப்படியொரு நிலையில் இருக்க வேண்டியவளல்ல நான்.

சங்கர் என்னுடன் இருந்திருந்தால், இந்நேரம் இருவரின் கனவுகளை நனவாக்கும் பயணத்தில் இருந்திருப்போம்.

சாதி ஒழிப்பில் வேரூன்றி, அதற்கான போராட்டப் பயணத்தில் நானும் ஒரு துரும்பாக இருப்பது குறித்து மகிழ்வதா?

அல்லது, என்னை ஆட்கொண்டு என்னைத் தன் பிள்ளை போலவே தத்தெடுத்துக் கொண்ட சங்கர் என்னுடன் இல்லையே என்பது குறித்து ஏங்கிக் கிடப்பதா?

இந்தக் கலவையான எண்ணங்களைச் சுமந்துதான், என் வாழ்வு நகர்கிறது.

இதற்கிடையிலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். புதிய உறவுகளைக் கொண்டாடுகிறேன். என் பணியிடத்தில் துறுதுறுவென அணில்குட்டியாய் ஓடுகிறேன்.

பறையிசை கேட்டாலே கால்கள் ஆட்டம் கொள்கின்றன. இறகு போல் ஆடுகிறேன். ஆனாலும், மலையின் கனத்தை என் நெஞ்சம் சுமந்து நிற்கிறது.

சமத்துவத்துக்கான பயணத்தில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் என்பது ஒரு வகை நிறைவைத் தருகிறது.

சங்கருக்கு நான் செய்யும் வாழ்நாள் நியாயம் என்ற உணர்வு, நிம்மதியைத் தருகிறது.

என் வீட்டில் எனக்கு இல்லாத வசதிகளே இல்லை. என்ன வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதைக் கேட்காமலேயே புரிந்து தருகிற பெற்றோரைத்தான் பெற்றிருந்தேன்.

என் பெற்றோருக்கு நானே உலகமாக இருந்தேன். என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்து, தட்டித் தட்டி உருக் கொடுத்தார்கள்.

எனக்கொரு தம்பியும் இருந்தான். அவனைக் காட்டிலும் நான் என் பெற்றோருக்குப் பெரிதாகத் தெரிந்தேன்.

ஏன் என இப்போது யோசித்தால் புரிகிறது. சாதி கௌரவத்தைக் காப்பதற்குப் பெண்தான் கருவியாகப் பார்க்கப்படுகிறாள்.

ஒரு ஆணைக் காட்டிலும், பெண்ணைக் கொண்டுதான் சாதி தன் கட்டுக்கோப்பைக் குலையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

ஏனெனில், அவள்தான் தங்களின் தொடர்ச்சியாக, சாதியைப் பேணப் போகிற அடுத்த சந்ததியைப் பெற்றெடுத்துக் கொடுக்கும் இயந்திரம்.

இதைத் தாண்டிய இன்னொரு அளவுகோலாக, சமூகத்தின் பொதுப்புத்தியும் ‘ஒழுக்கம்’ என்பதைப் பெண்ணுக்கு மட்டுமானதாக ஏற்றி வைத்திருக்கிறது.

சங்கருடனான காதல் என் வீட்டில் தெரிய வந்த போது, அதற்கு எதிரான வன்மம் கசியத் தொடங்கி விட்டது. அதை முறியடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

‘முதலில் படிப்பை முடியுங்கள், பிறகு பேசலாம்’ என்று சொல்லியிருந்தால்கூட சங்கர் அதை உறுதியாய் ஏற்றிருப்பான்.

ஆனால், எங்கள் காதலுக்கு எதிராகச் சதிவலை பின்னப்பட்டது. இதனால் மணமுடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

அப்படி எங்களை முடிவெடுக்கச் செய்ததன் முழுப்பொறுப்பு சாதிவெறிதான் இந்தச் சாதிய அமைப்புதான்.

இப்படிப்பட்ட கேள்விகளைச் சுமந்திருக்கிற சமூகத்தினுள் நின்றுதான், நான் காதல் போற்றி நிற்கிறேன்.

சாதியக் கெளரவக் கொலைகளுக்கு எதிராக நிற்கிறேன். ஒட்டுமொத்தத்தில் சாதி ஒழிப்புக்காக நிற்கிறேன்.

நான் என்ன உடை அணிய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என்பதெல்லாம் என் உரிமை சார்ந்தது.

எனக்கான இந்த உரிமையை, விடுதலையை விட்டுக்கொடுக்காத பெரியாரின் பெண்ணாக இருந்தால் மட்டும்தான் சாதியத்திற்கு எதிராக நான் வாழ்நாள் முழுக்கப் பங்களிக்க முடியும்.

அப்போதுதான் அதற்குத் தகுதியுடையவளாக நான் ஆவேன்.

நான் பூ வைக்க மாட்டேன். நீண்ட முடி வைத்துக்கொள்ள மாட்டேன். பெண்ணிற்கு எனச் சொல்லப்படுகிற மென்மையை நான் விட்டொழிக்கிறேன்.

நான் அலங்காரத்துக்குரியவளாய் இருக்க விரும்பவில்லை.

இப்போது பைக் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டேன். நாளை எனக்கென புல்லட் வாங்க வேண்டுமென முடிவு செய்திருக்கிறேன்.

இதெல்லாம் மனதிடம் உள்ளவளாக, எதற்கும் அஞ்சாதவளாக, எதையும் எதிர்த்து நிற்கும் வல்லமை உடையவளாக என்னை உணரச் செய்கிறது.

இன்னும் இன்னும் என் வலிமையைப் பெருக்குவேன்.

எங்கள் மீதான கொலைச் செயலுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தராமல் ஓய மாட்டேன்.

இன்னொரு சாதிய கெளரவக் கொலைக்கு, காதலைக் கொல்வதற்கு எந்தச் சாதி வெறியனும் அச்சம் கொள்கிற மனநிலையை என் வழக்கின் தீர்ப்பால் உறுதியாக ஏற்படுத்துவேன்.

சாதிய கெளரவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வர வேண்டும். அதற்கான போராட்டப் பயணத்தில் ஒரு பாய்ச்சலைக் கொடுப்பேன்.

இந்தப் பயணம் ராஜபாட்டையாக இல்லாது போனாலும், என் பயண இலக்கு நோக்கி தொடர்ந்து முன்னேறுவேன்.

SHARE