சக மாணவிகள் மாகாண மட்டப் பரீட்சையில் சித்தியடைய மாட்டாய், அடுத்தாண்டும் ஒரே வகுப்பிலேயே மீண்டும் படிக்கப் போகின்றாய் என பகிடி பண்ணியதை தாங்க முடியாத மாணவி தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
இணுவில் மத்திய கல்லூரியில் தரம் 09 ல் கல்வி கற்ற மாணவியான சுதாகரன் சுதாஜினி (வயது14) கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த மாணவி பாடசாலை விடுமுறை விட்ட தினமான கடந்த 05 ம் திகதி நள்ளிரவு வீட்டில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில் பெற்றோர்கள் அவரை காப்பாற்றும் முகமாக தீயை அணைத்து பாரிய எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த போதிலும் நேற்று திங்கட்கிழமை மதியம் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.
இவருடைய மரண விசாரனையை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.