சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் நிந்தவூரைச் சேர்ந்த அரச சட்டவாதி  ஷிஹான் முஸ்தபா

150
(நூருள் ஹுதா உமர்)
நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம் எம் முஸ்தபா அவர்களின் பேரன் ஷிஹான் முஸ்தபா பிரான்ஸில் உள்ள பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வர்த்தக சட்ட துறையில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இடைநிலை கல்வியையும், கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்.
லண்டனில் முகாமைத்துவ பட்டைய கணக்காளர் பட்டப் படிப்பை மேற்கொண்ட இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதி பெற்ற இவர் சட்டக் கல்லூரி விவாத அணியில் இடம் பெற்றதுடன் 2013 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சர்வதேச சமுத்திரவியல் சட்ட விவாத போட்டியில் பங்கு பற்றி பாராட்டு பெற்றார்.
லண்டன் சவ்த் கெம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச விவாதப் போட்டியில் 29 நாடுகள் பங்கு பற்றிய போதும் இறுதிபோட்டிக்கு இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்து நாடுகளின் போட்டியாளர்களே தெளிவாக இருந்தனர்.
இப்போட்டியில் இலங்கையில் இருந்து பங்கு பற்றிய நான்கு சட்டக் கல்லூரி மாணவர்களில் இவரும் ஒருவராக இருந்து சிறப்பாக விவாதித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
2015 ம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக செயல்பட்ட சிஹான் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  அரசாங்கத்தில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஒருங்கிணைப்புச் செயலகத்தின் சட்டப்பணிப்பாளராக நியமனம் பெற்று பணியாற்றினார்.
தற்போது இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் நீதிமன்ற அரச சட்டவாதியாக பணியாற்றி வரும் இவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வர்த்தக சட்டத்துறையில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது இவருக்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவரும், மேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான கமால் முஸ்தபா வின் மூத்த முதல்வரும் ஆவார்.
SHARE