சட்டம் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக தமக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களை வேட்டையாடுவதற்காக அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தை பயன்படுத்தி வருவதாக கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான துறவிகள் குரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
துறவிகள் குரல் அமைப்பு நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளித்த மகஜரில் இதனை கூறியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்கள், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் நேர்மையாக பணிப்புரிந்த அரச ஊழியர்களை வேட்டையாட அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தை பயன்படுத்தி வருகிறது.
இதனை தவிர பிக்குகள், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து படையினரையும் சிறையில் அடைத்து வருகின்றனர்.
தேசிய வளங்களை விற்பனை செய்வது, பல்வேறு விடயங்களை முன்வைத்து நீதிமன்ற தீர்ப்பை தாமதிப்பது போன்ற நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீட்டில் நடைபெறுகிறது.
இதனால், அரசியலுக்கு அடிப்பணியாது சகலருக்கும் நியாயமான முறையில் சட்டத்தை அமுல்படுத்துமாறு துறவிகள் குரல் அமைப்பு தனது மகஜரில் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.