சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும்-ஜனாதிபதி

222
விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்களில், சிறப்புரிமைகளைப் பெற்ற ஒரு சிலருக்கு மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி ஒதுக்கப்படுவது எவ்வளவு தூரம் நியாயமானது என பொதுமக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2016 ஆசிய சட்ட மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் சட்ட மாநாடு ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவின் பொன்விழா நிகழ்வுகள் ,yq;ifapy; நடைபெறுவதுடன், அதனோடு இணைந்ததாக 2016 சட்ட மாநாடு ஒகஸ்ட் 13,14, மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சட்டம் அனைவருக்கும் நியாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சட்டம் சுயாதீனமாகவும் பக்கசார்பற்றதாகவும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் அரசியல்யாப்பு அந்நாட்டின் சட்டத்தைப் பலப்படுத்தும் முக்கிய காரணி எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்ட ஆட்சியை பலப்படுத்தும் போது சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்றும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்றவேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
சட்டத் தீர்வுகளை தாமதமின்றி பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக தேவையான நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதற்கு  அனைவருடைய  ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பு நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கும் வகையிலும் மனித சமூகத்தை வளப்படுத்திப் பாதுகாக்கும் வகையிலும் அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரதமர் ரனில் விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, ஜோன் அமரதுங்க, சந்திம வீரக்கொடி, பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன மற்றும் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சட்டத்துறை நிபுணர்களும் சட்ட மாநாட்டின் இணைத் தலைவர் உபுல் ஜயசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE