இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு புகலிட கோரிக்கையாளர்களை உடனடியாக மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 32 பேரில் 30 மியன்மார் நாட்டவர்களே இவ்வாறு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
எனினும் படகோட்டிகளான ஏனைய இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் அனுமதி பெறும்வரை தடுத்து வைக்குமாறும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30ஆம் திகதி காலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட குறித்த படகில் மியன்மாரைச் சேர்ந்த 16 சிறுவர்கள் உட்பட 30 பேரையும், இந்தியவைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்திருந்தனர்.
இவர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து இன்று காலை குறித்த 32 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போதே யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் பொதுமக்கள் ஒன்றியத்தின் முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் மியன்மார் மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அகதி அந்தஸ்து கோரி குறித்த மியன்மார் நாட்டு மக்கள் வந்ததால் அவர்களை எதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கு அனுப்பும் வரைக்கும் இலங்கையில் தஞ்சமளிக்குமாறு குறித்த சட்டத்தரணியால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், குறித்த 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹானயிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் ஏனை இரு இந்திய மீனவர்களான படகோட்டிகளையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.