சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் மீன்பிடி செயற்பாடு குறைவடைந்துள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படும் அதேவேளை அவர்களது மீன்பிடி உபகரணங்கள் மீள் கையளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மீன்பிடி கண்காணிப்பு அமைப்பு ஒன்று மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.