கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இன்று(03) உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா்.
நேற்றைய தினம் அதிகாலை ஒரு மணியளில் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டிய பதினாறு முதிரை மரக் குற்றிகளை கிளிநொச்சி நகருக்கு கொண்டு வருவதற்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தொடா்பில் மேலதிக விசாரணைகள் தொடா்ந்தும் இடம்பெற்று வருகிறது.
கிளிநொச்சி அக்கராயன், முட்கொம்பன் காட்டுப் பகுதிகளில் சட்ட விரோத மரம் கடத்தல் இடம்பெற்று வருகிறது என தொடா்ச்சியாக பல தரப்பினா்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரமும் பாரவூா்தி ஒன்றில் கடத்தப்பட தயாராக இருந்த பல இலட்சங்கள் பெறுமதியான முதிரை மரக் குற்றிகள் அக்கராயன் பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டது. கடந்த காலங்களிலும் குறித்த பிரதேசங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்ட விரோமாக மரம் வெட்டியவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். இருந்தும் தொடா்ச்சியாக இந்த பிரதேசங்களில் சட்டவிரோத மணல் மற்றும் மரம் கடத்தல் இடம்பெற்று வந்துள்ளது
இதே வேளை கைது செய்யப்பட்டவா்கள் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபா் வெலிகன்னவின் வழி நடத்தலில் உதவி பொலீஸ் அத்தியட்சா் றொசான் ராஜபக்ஸவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.