
லிங்குசாமி இயக்க விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள ‘சண்டக் கோழி 2’ அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு, அதன் பின் கேன்சல் என மாறி மாறி இந்தப் படம் பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு வழியாக ஒருவருக்கொருவர் சமாதனமாகி படத்தை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
யுவன்ஷங்கர் ராஜா மீண்டும் ‘லைம் லைட்டுக்குள்’ வந்துவிட்டதால் அவரையே இசையமைப்பாளராக வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல். முதல் பாகத்திற்கு யுவன்தான் இசையமைத்திருந்தார். ஆனால், இரண்டாம் பாகம் அறிவிப்பு வந்த போது அதற்கு டி. இமான் தான் இசையமைக்கப் போகிறார் என்றார்கள்.
லிங்குசாமி, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகும் படத்தை மார்ச் மாதம் முதல் இயக்க உள்ளார். அதற்கு முன்பாக ‘சண்டக் கோழி 2’ படத்தை ஆரம்பித்து முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம்.
இப்போதைக்கு வெளியாகியுள்ள தகவல்கள் இவை. ஆனால், லிங்குசாமி இயக்கும் படத்தைப் பொறுத்தவரையில் அது ஆரம்பமாகும் போது மட்டுமே படத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இரண்டு மூன்று முறை ‘எடுப்போம், எடுக்க மாட்டோம்’ என்று சொல்லப்பட்ட படமாயிற்றே, அதனால் ஆரம்பமாகி முடிவதற்கு வரை என்ன மாற்றங்கள் வேண்டுமானால் வரலாம்.