மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.கிழக்கின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் இழந்த அதிபர் முகம்மர் கடாபி தலைநகர் திரிபோலிக்குள் முடக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டம் வெடித்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை எலிகளாகவும் கரப்பான் பூச்சிகளாகவும் வர்ணித்தார்.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தவுடன் மறுபடியும் தொலைக்காட்சியில் முகம் காட்டாமல் உரையாடிய அதிபர் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் பின்லாடனும் அவரின் அல்ஹொய்தா அமைப்பும் இருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்.
உலகப் பயங்கரவாதியென்று மேற்குலகால் வர்ணிக்கப்படும் பின்லாடனை தனது ஒடுக்குமுறையினை நியாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உலக ஆதரவு இல்லாமல் போகுமென்று நினைக்கின்றார் கேணல் கடாபி.
42 வருட கால ஆட்சியின் முடிவுரை அண்மித்துவிட்டதாக உணரும் கடாபி, குர்திஷ் இன மக்கள் மீது சதாம் உசேயின் இரசாயனக் குண்டுகளைப் பொழிந்தது போன்று தனது மக்கள் மீதும் அத்தகைய நாசகார யுத்தத்தினை கட்டவிழ்த்துவிடுவாரென்கிற அச்சம் நிலவுகின்றது. உலக வரலாற்றில் தனது மக்களைக் கரப்பான் பூச்சி என்று கூறிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.
வீடு வீடாகச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைத் தேடியழிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு ஆணையிடுகின்றான் அந்நாட்டின் தலைவன். நிலைமைகளை அவதானித்து முடிவெடுப்போம் என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை வழமை போன்று நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்கிறது. ஆட்சிக் கட்டமைப்பு சிதைந்து போன நிலையில் படையினர் ஒதுங்கிக் கொள்ள தனது நம்பிக்கை நட்சத்திரங்களான கூலிப் படையினரை மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார் கடாபி.
கடாபியின் அராஜகத்தை நிராகரித்த பல இராஜதந்திரிகள், உயர்நிலைப் படையதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். ஐ.நா. சபையில் லிபியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தரப்பினரும் கேணல் கடாபிக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள்.
லிபியாவின் துணைத் தூதுவராக ஐ.நா. சபையில் பணிபுரியும் இப்ராகிம் (Ibrahim Dabaashi) லிபியாவில் நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை (Genocide) என்று வெளிப்படையாக உலக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததைக் கவனிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது இதே விதமான குரல்கள் ஒலித்தன.
அழிவு முடிந்த பின்னர் விசாரணைகளை மேற்கொள்வோமென அடம்பிடித்தது சர்வதேச சபைகள். அனைத்துலக ஊடகங்களை உள்ளே அனுமதிக்காமல் மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுகிறது கடாபி அரசு.இருப்பினும் அல்ஜசீரா தொலைக்காட்சியூடாக பல காணொளிகள் வெளிவருவதனை லிபியா ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அங்கு அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை மீட்க ஏறத்தாழ 26 நாடுகள், விமானங்களை, யுத்தக் கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு வெளியேறியவர்கள் நேரில் கண்ட பல கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்துகின்றனர்.
போர் விமானங்கள் மூலம் பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதலை கடாபி அரசு மேற்கொள்வதாக வந்த செய்தியை உடனடியாக எவரும் நம்பவில்லை. ஆனாலும் குண்டு வீச மறுத்த இருவர் தமது மிராஜ் எவ் ஐ போர் விமானத்தினை வட கடலிலுள்ள மால்ரா( Malta) தீவில் இறக்கி அங்கு அடைக்கலம் கோரியவுடன் உண்மைகள் அம்பலமானது
.
விமானப் படைப் பிரிவினரும் எழுச்சிக்காரர்களுடன் இணைந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இத்தனை தகவல்கள் உலக மக்களுக்குத் தெரிந்தாலும் மூடிய அறைக்குள் கூட்டம் நடத்திய ஐ.நா. பாதுகாப்புச் சபையானது கண்டனத்தைத் தெரிவித்து அமைதியாகிவிட்டதுதான் கொடுமை.
அதேவேளை, லிபியாவுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டுமெனப் பாதுகாப்புச் சபையில் இம்மாத தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பிரான்ஸின் அதிபர் நிக்கலாஸ் சாக்கோசியும் தனது மக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்துள்ள லிபியாவினை தண்டிக்க வேண்டுமென ஜேர்மனிய அதிபர் அஞ்ஞெலா மேர்க்கல் அம்மையாரும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
“அரபுலீக்’ எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பும் லிபியாவின் பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. லிபியாவை இறுதியாக ஆண்ட இத்தாலி தேசந்தான் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் இத்தாலிய நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் 20 சதவீதம் லிபியாவிலிருந்துதான் வருகிறது.
1988ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரான லொக்கபீயில் (Lockerbie) நடந்த பனாம் (Panam) விமானக் குண்டுவெடிப்பில் கடாபியை நோக்கியே குற்றச் சாட்டுக்கள் குவிந்தன. 2003இல் அதனை ஏற்று நஷ்டஈடு வழங்குவதாக கேணல் கடாபி உத்தரவாதமளித்ததும் இத்தாலியுடனான உறவு பலமடைந்தது.
இன்று மக்கள் கிளர்ச்சி தீவிரமடைவதால் கடாபி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அடுத்து உருவாகப் போகும் அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்ளுமென்பதை ஊகித்தறிய முடியாது இத்தாலி தவிக்கிறது. இத்தாலிக்கு மட்டுமல்ல மேற்குலகிற்கும் அபிவிருத்தி அடைந்துள்ள ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கில் எற்பட்டு வரும் சடுதியான மாற்றங்கள், புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை உருவாக்குகின்றது.
அதிலும் பாதுகாப்பு குறித்த ஒரு ஆபத்தான நிலையை இஸ்ரேல் எதிர்நோக்குவதையும் காணலாம். மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் இயங்கு நிலை மாறுதல்கள், சுனாமி போல் எழும் அரசியல் மயப்பட்ட தன்னியல்பான எழுச்சிகள், எகிப்துடன் செய்துகொண்ட 32 வருட கால சமாதான உடன்படிக்கையை சிக்கலுக்குள்ளாக்கி விடுமோவென்று இஸ்ரேல் அச்சமடைகிறது.
வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மையப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் ஸ்திரத் தன்மையானது குறிப்பாக அதன் நட்பு நாடுகளான எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது.
அதேவேளை, பல தசாப்த காலமாக ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்த அமெரிக்காவின் விருப்புத் தெரிவுக்குரிய நாடுகளிலுள்ள மக்கள் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக அரசியல் சுதந்திரம், பொருண்மிய உயர்வு பெறுவதற்குப் போராட வேண்டுமென்கிற விழிப்புணர்வினை தற்போது பெற்றுள்ளார்கள் போல் தெரிகிறது.
அரபு உலகின் சமகால நிலைவரங்கள், எழுச்சிக்குரிய கால கட்டத்தில் மையமிட்டுச் சுழல்கின்றன.. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற இயங்கியல் போக்கில் மத்திய கிழக்கில் ஏற்படும் ஜனநாயக மயமாகும் மாற்றங்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கான அகண்ட வாசலைத் திறந்து தனது கடுமையான கரமான இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்தாகிவிடுமோவென்று அமெரிக்கா கவலையடைந்தாலும் படைவலுவில் இந்த இருவருக்கும் போட்டியாக மத்திய கிழக்கில் எவரும் இல்லையென்பதுதான் யதார்த்தம்.