சத்துருக்கொண்டான் படுகொலையின் 25ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் கிராமங்களை சேர்ந்த மக்களும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கருணாகரன், துரைத்தினம், இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த இந்த 184 பேரும் இராணுவ முகாமுக்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக அப்படுகொலை சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.
1990 ம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தநிறுத்தம் முறிவடைந்த போது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். பலர் கடத்தி செல்லப்பட்டு உயிருடன் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
இப்படுகொலைகளில் இராணுவத்தினருடன் இணைந்து புளொட் மோகன் தலைமையிலான குழுவினரும் மஜீத் தலைமையிலான ஜிகாத் குழுவினரும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.